ஐஎன்எக்ஸ் வழக்கில் சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி: மற்ற மனுக்களும் பட்டியலிடப்படவில்லை

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
Updated on
2 min read

புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், முன்ஜாமீன் கோரி கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

மேலும், சிபிஐ விசாரணை நீதிமன்றம் கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற விசாரணை பட்டியலில் இன்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்டு இருந்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீ்ன் கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படுவதாக இருந்தநிலையில், வெள்ளிக்கிழமைதான் பட்டியலிடப்பட்டது.

இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சிபிஐ விசாரணை நீதிமன்றம், பிறப்பித்த கைது உத்தரவை ரத்து செய்யக்கோரியும் சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி பானுமதி திங்கட்கிழமைக்கு(இன்று) ஒத்திவைத்தார்.

இந்நிலையில், சிபிஐ விசாரணை நீதிமன்றம் ப.சிதம்பரத்துக்கு எதிராக பிறப்பித்த கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைப் பட்டியலிடப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும்முன் ப.சிதம்பரம் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், " ப.சிதம்பரம் கைதுக்கு எதிரான மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்று விசாரணைப் பட்டியலில் இல்லை." என முறையிட்டார்.

அதற்கு நீதிபதி பானுமதி, " அந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பார்வைக்கு சென்றபின் அவர் உத்தரவுகளுக்குப்பின் விசாரணைக்கு எடுக்கப்படும். அதனால் பதிவாளர் பட்டியலில் மனுவை சேர்க்கவில்லை" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுமீதான விசாரணை நீதிபதி பானுமதி, நீதிபதி போபண்ணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வியும், சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகினார்

அப்போது நீதிபதி பானுமதி, வழக்கறிஞர் கபில் சிபிலிடம், " ப.சிதம்பரத்துக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை ரத்து செய்தநிலையில் நாங்கள் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?, ஏற்கனவே சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைதும் செய்யப்பட்டுவிட்டார். அப்படி இருக்கும்போது இந்த மனு ஆக்கப்பூர்வமில்லாததாகவே கருதப்படும் " என்று தெரிவித்தார்

அதற்கு வழக்கறிஞர் சிங்வி " எங்கள் உரிமையை நிராகரிக்க முடியாது. ப.சிதம்பரம் தன்னை கைது செய்யத் தடை விதிக்ககும் உரிமையை சிபிஐ மதிக்கவில்லை. இந்த மனு உச்ச நீதிமன்ற விசாரணை பட்டியலில் இருந்தபோது, அதை மீறி சிதம்பரத்தை கைது செய்தது" என்று வாதிட்டார்.

நீதிபதி பானுமதி பிறப்பித்த உத்தரவில், " ப.சிதம்பரத்தின்மனுவை விசாரித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல. சட்டப்பூர்வமாக தனக்கு நிவாரணம் தேடுவதற்கு சிதம்பரத்துக்கு உரிமை இருக்கிறது. உரிய விசாரணை நீதிமன்றத்தை சிதம்பரம் அனுகி தனக்கு நிவாரணம் பெறலாம். ஆதலால் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க இயலாது" எனத் தள்ளுபடி செய்தார்.


பிடிஐ

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in