Published : 26 Aug 2019 12:44 PM
Last Updated : 26 Aug 2019 12:44 PM

அயோத்தி தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்படம்: திரையிட கொல்கத்தா பல்கலை நிர்வாகம் எதிர்ப்பு

கொல்கத்தா

கொல்கத்தா பிரெசிடென்ஸி மாணவர் அமைப்பு ஒன்று பல்கலைக்கழகத்தில் 'ராம் கி நாம்' ஆவணப்படத்தை திரையிடப்போவதாக அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தேவையின்றி உருவாக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ள பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் திரையிடல் நிகழ்வைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் இயக்கிய 'ராம் கி நாம்' (In the name of god) ஆவணப்படம் 1992ல் தயாரிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு சம்பவங்களையும் அதைத் தொடர்ந்து நடந்த வகுப்புவாத வன்முறைகள் குறித்தும் அயோத்தியில் பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட நடத்தப்பட்ட பிரச்சாரங்கள் குறித்தும் இந்த ஆவணப்படம் ஆராய்கிறது.

இப்படம் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை பேசியுள்ளதால் பல்கலைக்கழகத்தில் திரையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொல்கத்தா பிரெசிடென்ஸி பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் ஆனந்த் பட்வர்த்தன் இயக்கிய 'ராம் கி நாம்' ஆவணப்படம் இன்று திரையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தப்பட முயற்சிகள் நடைபெறுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சயான் சக்கரவர்த்தி கூறுகையில், ''பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு சமகால பிரச்சினைகளை மாணவர்கள் விவாதித்துள்ளனர். கடந்த காலங்களில் இதற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்பட்டதில்லை. ஆனால் தற்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கான முயற்சிகளிலும் அவர் இறங்கியுள்ளார்'' என்றார்.

இப்பிரச்சினை குறித்து பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ''பிரெசிடென்ஸி பல்கலைக்கழகம் மாணவர்களின் உரிமைகளுக்கு எப்போதும் தடை விதித்ததில்லை. ஆனால் இத்தகைய சர்ச்சைக்குரிய ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த மாணவர்கள் தேவையான உரிய அனுமதிகளை பெற்றுள்ளனரா என்பதை பல்கலைக்கழகம் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது'' என்றார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x