

புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு பிரிவு(எஸ்பிஜி) பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்று, அவருக்கு 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை, மத்திய உள்துறை அமைச்சகம், அமைச்சரவைச் செயலாளர் ஆகியோர் தலைமையில் கூடி, உளவுத்துறை, ரா (RAW) ஆகியோரிடம் இருந்து தகவல்களைப் பெற்று பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யும். அந்த ஆய்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பிலும், " சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அமைப்புகள், உளவு அமைப்புகள் ஆகியவற்றுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தொடர்ந்து இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு மட்டும் ஏறக்குறைய 3 ஆயிரம் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்து சென்றபின்பும் ஏற்ககுறைய ஒரு ஆண்டுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவரின் மனைவி குர்ஷன் கவுர் மகள்கள் ஆகியோருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், மன்மோகன்சிங்கின் மனைவி, மகள்கள் தாமாக முன்வந்து எஸ்பிஜி பாதுகாப்பு தேவையில்லை என்று அறிவித்தனர்.
இந்நிலையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை எஸ்பிஜி பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், அமைச்சரவைச் செயலாளர், உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தும். அந்த ஆலோசனை கடந்த மேமாதம் 25-ம் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற்று அதற்கு பதிலாக இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யபட்டது.
மன்மோகன் சிங் பாதுகாப்புக்கு மட்டும் அவரின் மோதிதால் நேரு இல்லத்தில் ஏறக்குறைய 200 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இதுவரை எந்தவிதமான எழுத்துப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும் இந்த தகவலை எஸ்பிஜி பாதுகாப்பு பிரிவினர் உறுதி செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட செய்தி அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியைச் விட்டுச் சென்றபின், இறக்கும்வரை அவருக்கான எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக நோயில் வாஜ்பாய் இருந்தபோதிலும் கூட பாதுகாப்பு திரும்பப்பெறப்படவில்லை. ஆனால், அடிக்கடி பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக செல்லும் மன்மோகன் சிங்குக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது கேள்வியை எழுப்பியுள்ளது.
எஸ்பிஜி பிரிவில் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர கூறுகையில், " கடந்த 1985-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபின் எஸ்பிஜி பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால், ராஜீவ்காந்தி ஆட்சியை விட்டு அகன்றபின் அவருக்கான எஸ்பிஜி பிரிவை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திரும்பப் பெற்றது பெரிய விவாதமாக உருவானது.
ஆனால், கடந்த 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபின் எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அனைத்து முன்னாள் பிரதமர்கள், பிரதமர் அவர்களின் குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது என மாற்றியமைக்கப்பட்டது.
கடந்த 1999-ம் ஆண்டு வாஜ்பாய் அரசு எஸ்பிஜி பாதுகாப்பு விஷயத்தில் மறுஆய்வு செய்தது. அதன்படி முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டது" எனத் தெரிவித்தார்.
வாஜ்பாய் அரசு கொண்டுவந்த திருத்தத்தின்படி, ஒருபிரதமர் ஆட்சியில் இருந்து அகன்றபின், முதலாம் ஆண்டுக்குப்பின், ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை ஆய்வு செய்து பாதுகாப்பை மத்திய அரசு முடிவு செய்யலாம். 10-வது ஆண்டில் இருந்து பாதுகாப்பு குறைக்கப்படும் எனத் திருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்