

சிக்மக்ளூரு
வட கர்நாடகத்தில் சிக்மக்ளூரு தாலுக்காவில் காண்டியாவையும் பாலகேட்டேவையும் இணைக்கும் தொங்குபாலம் சமீபத்திய கனமழையில் சரிந்து விழுந்துவிட்டது. அதனால் மாணவர்களும் மக்களும் ஒவ்வொரு நாளும் பரிசலில் ஆற்றைக் கடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் இந்த மாதத் தொடக்கத்தில் இரண்டு வாரங்களாக இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் சிக்மக்ளூரு மாவட்டத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாலகேட்டேவில் ஆற்றைக் கடந்து செல்ல மக்கள் பயன்படுத்தும் தொங்கு பாலமும் சரிந்து விழுந்தது.
இதனால் கல்விக்காக சங்கமேஸ்வரா பேட்டைக்கு செல்லும் மாணவ மாணவிகள் ஒவ்வொரு நாளும் பாலேகாட்டேயிலிருந்து பரிசலில் ஆற்றைக்
கடந்துசெல்கின்றனர்.
இங்கு பாலம் வராத போது பரிசல்தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அது பலமுறை பலரை காவு வாங்கியிருக்கிறது. ஒருமுறை ஆற்றில் பரிசல் கவிழ்ந்து 3 பேர் இறந்ததால் பாலம் கட்ட வேண்டுமென மக்கள் போராடினர். இதன் விளைவாக 2010ல் இந்தத் தொங்கு பாலம் 2010ல் ரூ.44 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஆனால் சமீபத்திய மழையில் பெரிய பெரிய மரங்கள் விழுந்ததால் இப்பாலம் நிலைகுலைந்தது.
ஆற்றில் செல்லக்கூடிய பரிசல் பயணத்தைத் தவிர்க்க வேண்டுமென நினைத்தால் இங்கிருந்து சங்கமேஸ்வரா பேட்டைக்கு செல்ல 24 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிவளைத்துச் செல்ல வேண்டும்.
சங்கமேஸ்வரா பேட்டையில் உள்ள பூர்ணப்ராஞ்னா பள்ளியில் படிக்கும் மாணவர்களான நித்திஸ்ரீ, சுதன்வா, புவன், பிந்து உள்ளிட்ட பல மாணவர்களும் ஒவ்வொருநாளும் பரிசலில் கடந்துதான் பள்ளிக்கு வழக்கமாக வருகிறார்கள்.
ஒவ்வொருநாளும் பரிசல் மூலமாக பள்ளி செல்லும் பாலகாட்டேவில் வசிக்கும் மாணவி ஒருவரின் தந்தையான பி.எம்.கணேஷ் இதுகுறித்து பேசுகையில், ''என் நண்பர் ஹரீஷ்ஷும் நானும் பத்ராவதியிலிருந்து இரண்டு பரிசல்களை வாங்கினோம். இந்த பரிசல்களுக்காக நாங்கள் ரூ.10 ஆயிரத்தை எங்கள் பங்களிப்பாக வழங்கியுள்ளோம். குழந்தைகளை பரிசல் மூலம் அனுப்ப தயங்கும் பெற்றோர்கள் தனியார் வாகனங்களை சார்ந்து இருக்கிறார்கள்.'' என்றார்.
பலேஹோனூரில் வசிக்கும் சதீஷ் ஜே கூறுகையில், ''ஒவ்வொரு நாளும் எங்கள் ஊர் குழந்தைகள் படிப்பதற்காக 48 கி.மீ. தொலைவு சென்றுவர வேண்டும். ஆரம்பத்தில் இந்த தூரம் சென்றுதிரும்பிவர வெறும் 8 கி.மீ மட்டுமே இருந்தது'' என்றார்.
துணை ஆணையர் பாகடி கவுதம் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பாலம் சேதமடைந்ததை வந்து பார்வையிட்டனர். தேவதான கிராம பஞ்சாயத்தின் பஞ்சாயத்து மேம்பாட்டு அலுவலர் எம்.ஆர்.தேவராஜு நேற்று தி இந்துவிடம் ''இந்தப் பாலம் சுமார் ஒன்பது ஆண்டுகள் பழமையானது. மழையின்போது கனமான மரங்கள் விழுந்ததால் அது சேதமடைந்தது. பாலம் அமைப்பதற்கான இடம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் கிராமப் பஞ்சாயத்து அந்தப் பாலத்தை மீண்டும் மீட்டெடுத்து நிர்மாணிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாது'' என்றார்.
பாலம் கட்டும் நிறுவனத்துடன் மாவட்ட நிர்வாகம் பேசிவருவதாகக் கூறிய டி.டி.ராஜே கவுடா எம்எல்ஏ மீண்டும் பாலம் அமைத்துத் தரப்படும் என்று கிராம மக்களுக்கு உறுதி அளித்தார். இருப்பினும், வாக்குறுதி இன்னும் நிறைவேறவில்லை.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்