Published : 25 Aug 2019 07:21 PM
Last Updated : 25 Aug 2019 07:21 PM

குஜராத்தின் சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டம் உயர்வதால் காணாமல் போய்க்கொண்டிருக்கும் மத்தியப் பிரதேச கிராமம்

இந்தூர்

குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டம் உயர்வதால் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் மெல்லமெல்ல மூழ்கிக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டதால் அவ்வூரின் மக்கள் 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது அவ்வூர் மக்களுக்கு பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பலத்த மழை பெய்துவருவதால் இங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது நர்மதை அணையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையும் நிரம்பத் தொடங்கியுள்ளது. கட்டுக்கடங்காத நீர்வரத்தின் காரணமாக அணையின் நீர்மட்டம் அதன் கொள்ளவைவிட 6.5 மீட்டர் உயர்ந்து தற்போது 133 மீட்டர் உயரத்தை எட்டியுள்ளது.

இதன்காரணமாக இதற்கு இணையான சமவெளிப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளன. 180 கிலோமீட்டர் தொலைவில் அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் தார் மாவட்டத்தைச் சேர்ந்த நிசர்பூர் கிராமம் அணைக்கு நேர்திசையில் ஆற்றின் நீர்மட்டத்திற்கு தாழ்வான பகுதியில் இருப்பதால் இக்கிராமம் முற்றிலுமாக மூழ்கிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணையில் இடைவிடாமல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கடந்த சில தினங்களாக மூழ்கிய கிராமம் இன்று மெல்லமெல்ல மறைந்துகொண்டிருக்கிறது. கிராமத்தின் மக்கள் தொகை 10 ஆயிரம் பேர். அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த அனைத்தும் கண்ணெதிரே அழிந்து வருவதைக் கண்டு அவர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர்.

இதுகுறித்து உள்ளூர் வர்த்தக சங்கத்தின் தலைவரும் பாதிக்கப்பட்ட மக்களின் தலைவருமான தேவேந்திர குமார் காம்தார் பிடிஐயிடம் பேசுகையில்,

''இரு நூற்றாண்டுகள் பழமையான நிசர்பூர் கிராமத்தில் நாங்கள் 10 ஆயிரம் பேர் வசித்து வந்தோம். இந்த கிராமம் உரி பாகினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கடந்த 20 நாட்களாக சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நீர் வெளியேற்றப்பட்ட நீர் நிசர்பூர் கிராமத்தையே முற்றிலுமாக மூழ்கடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிராமம் பாதி மூழ்கிக்கொண்டிருக்கும்போதே மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுவிட்டனர். ஆனால் வெளியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரை எந்தவித இழப்பீடோ இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்யும்வகையில் மாற்று இடங்ளுக்கான ஏற்பாடோ செய்துதரப்படவில்லை.'' என்று வருத்தம் தெரிவித்தார்.

பெயர் சொல்லவிரும்பாத ஒரு அதிகாரி அதை மறுத்தார், ''மணிக்கு ஒருதரம் நீர்மட்டம் உயர்ந்துகொண்டிருக்கும்போதே மக்களை வெளியேறுமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால் வெள்ளம் கிராமத்தை மூழகடித்துக்கொண்டிருந்த நிலையிலும் வெளியேறாமல் பலர் நிசார்பூரிலேயே தொடர்ந்து தங்கினர்.

தற்போது முற்றிலுமாக மூழ்கிவரும் நிலையில் அவர்களுக்கு மேட்டுப்பாங்கான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் நிரந்தரமாகத் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யும்வரை தகரக் கொட்டகைகளில் அவர்களை தங்கவைக்க அரசு ஏற்பாடு செய்துவருகிறது. அதேபோல ஒவ்வொருவரின் வீட்டில் இருந்த பொருட்களையும் வீணாகாமல் கிராமத்தைவிட்டு வாகனங்கள் மூலம் வெளியே எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன.'' என்றார்.

கிராமவாசிகள் புழங்கிய சிறிய சந்தைகள், கோயில்கள், மசூதிகள், கல்லறைகள் மற்றும் பல ஆண்டுகளாக அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த பிற தளங்கள் இப்போது மெதுமெதுவாக மறைந்துதொடங்கி தற்போது முற்றிலுமாக காணாமல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய யாஷ் பட்டீதார் என்பவர், "இவை எல்லாம் நான் வளர்ந்த இடங்கள், என்னுடன் நண்பர்கள் விளையாடிய இடங்கள். ஒருவேளை கோடையில் நீர் மட்டம் குறையும். ஆனால் பெரிய அளவில் இடம்பெயர்ந்துள்ள நிசர்பூர்கிராமம் மீண்டும் ஒருபோதும் மாறப் போவதில்லை.'' என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x