Published : 25 Aug 2019 05:23 PM
Last Updated : 25 Aug 2019 05:23 PM

காஷ்மீரில் இயல்பான சூழல் இல்லை: டி.ராஜா கருத்து

ஹைதராபாத்,
காஷ்மீரில் இயல்பான சூழல் இல்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சலுகை, அரசியலமைப்பு 370 பிரிவை மத்திய அரசு நீக்கியது அரசியலமைப்புக்கு விரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகையை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்புப் பிரிவு 370 திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது.

அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.11 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் காஷ்மீர் மாநிலத்தின் சூழலையும், மக்களின் கருத்தையும் கேட்க நேற்று சென்றனர்.

ஆனால், அவர்களை ஸ்ரீநகர் விமான நிலையத்தோடு அதிகாரிகள் திருப்பி அனுப்பினார்கள். இதனால் ஸ்ரீநகருக்குள் செல்ல முடியாமல் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 370 பிரிவு ரத்து செய்தலும், காஷ்மீர் நிலவரமும் என்ற தலைப்பில் கட்சிக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா பங்கேற்றார். அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
காஷ்மீர் முழுமையும் இயல்பான சூழல் இல்லை.இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்தவிதமான தொலைபேசியும் இயங்கவில்லை. ஆனால், லேண்ட்லைன் இயங்குகிறது என்று மத்திய அரசு கூறுகிறது, ஆனால், இயங்கவில்லை. நாங்கள் முயற்சித்தோம். எந்தவிதமான லேண்ட்லைன் தொலைபேசியும் இயங்கவில்லை.
பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கின்றன. ஆனால், மாணவர்கள் யாரும் செல்லவில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர் தயாராக இல்லை. மக்கள் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. அங்கு ஊரடங்கு உத்தரவு இருக்கிறது. அனைத்தும் இயல்பாக இருக்கிறது, இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது என்றால், இந்த ஊரடங்கு உத்தரவு ஏன் தொடர வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தை தந்திரமாக திருத்தி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரித்து இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றிவிட்டது. அரசியலமைப்புச்சட்டப்படி, மாநிலத்தைப் பிரிக்கும் முன் சட்டப்பேரவையில் ஆலோசித்தபின்புதான் முடிவு எடுக்கவேண்டும்.

மத்திய அரசு செய்துள்ளவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அரசியலமைப்பு 370 பிரிவை திரும்பப்பெற்றது அரசமைப்புக்கு விரோதமானது. ஜனநாயக விரோதமானது. இந்திய ஜனநாயகத்தின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது.

சுதந்திரத்துக்குப்பின்பும் காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதியாகவே இருந்தது. ஆனால் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும், மோடி பிரதமராக வந்தபின்புதான் காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தான் முஸ்லிம்கள் ஒருபோதும் இந்திய முஸ்லிம்களையும், காஷ்மீர் முஸ்லிம்களையும் ஏற்கமாட்டார்கள். பாகிஸ்தானுடன் சேர்வதையும் ஏற்க மாட்டார்கள். ஏனென்றால், இருவருக்கும் இடையே கலாச்சார ரீதியாக பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன. பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னா, காஷ்மீர் முஸ்லிம்களை முஸ்லிம்களாக கருதுவதற்கும், நினைக்கவும் ஒப்புக்கொள்ளவில்லை
இவ்வாறு டி ராஜா தெரிவித்தார்.
பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x