Published : 25 Aug 2019 02:48 PM
Last Updated : 25 Aug 2019 02:48 PM

ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பை தடுத்திருக்கிறோம்; அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை: ஆளுநர் பேட்டி

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் எந்தவிதமான சிரமும் இல்லை, தட்டுப்பாடும் இல்லை, தகவல்தொடர்பு முடக்கத்தால், ஏராளமான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்று மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில் 370 பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தையும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. அந்த மாநிலத்தில் எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் தவிர்க்க கடந்த 5-ம் தேதியில் இருந்து பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை அரசு விதித்துள்ளது.

காஷ்மீரில் இன்னும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருவதால், கட்டுபாடுகள் தொடர்ந்து வருகின்றன. முன்னாள் முதல்வர்கள் இன்னும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி, செல்போன், தொலைக்காட்சி, இன்டர்நேட் சேவை இன்னும் கிடைக்கவில்லை.

இந்த சூழலில் ஜம்முகாஷ்மீரில் நிலவும் சூழலை அறியவும், மக்களின் கருத்தைக் கேட்கவும் நேற்று ராகுல் காந்தி, உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகளைக் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றனர். ஆனால், அவர்கள் அனைவரையும் ஸ்ரீநகருக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து திருப்பி அனுப்பினார்கள். இதனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிருப்தியுன் சென்றனர்.


இந்நிலையில் காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி வந்திருந்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறதா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், " ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களுக்கு மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் எந்தவிதமான சிரமும் இல்லை, தட்டுப்பாடும் இல்லை. அனைத்துப் பொருட்களும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தபின் கடந்த 10 நாட்களில் மாநிலத்தில் எந்தவிதமான வன்முறையும் இல்லை. உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.

செல்போன், தொலைத்தொடர்பு சேவை முடக்கப்பட்டுள்ளது இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், " தகவல்தொடர்பை தடுத்துவைத்திருப்பதால், உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறே. இதனால் என்ன தீங்கு விளைந்துவிட்டது. இதற்கு முன் காஷ்மீரில் ஏதேனும் பிரச்சினை, கலவரம் என்றால் இந்நேரம் 50 உயிர்கள் பலியாகி இருக்கும். இப்போது எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லைதானே. எங்களின் நோக்கம் எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படக்கூடாது என்பதுதான். 10 நாட்களுக்கு தொலைபேசி இணைப்பு இல்லாவி்ட்டால் இருக்கட்டும்,

விரைவில் அனைத்தையும் சரிசெய்வோம். ஈகைத் திருநாள் அன்று மக்களுக்குத் தேவையான இறைச்சி, காய்கறிகள், முட்டை, பால் போன்றவை அவர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யப்பட்டது.மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிதான் என்னை காஷ்மீர் ஆளுநராக பணியாற்றும் பொறுப்பை ஏற்கக் கூறினார். இது வரலாற்றுசிறப்பு மிக்க பணியாக இருக்கும் என்று என்னிடம் கூறினார் " எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x