Published : 25 Aug 2019 01:50 PM
Last Updated : 25 Aug 2019 01:50 PM

பாஜக தலைமையகத்தில் அருண் ஜேட்லி உடலுக்கு மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் இறுதி அஞ்சலி

புதுடெல்லி

பாஜக தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்,கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ்மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பிறபகல் 12.07 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லியின் , கைலாஷ் காலனி இல்லத்திலிருந்து டெல்லியில் தீன் தயால் உபாத்யயா மார்க்கில் அமைந்துள்ள பாஜக தலைமையகத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. பாஜக அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் நண்பகல் ஒருமணிவரை கட்சித் தொண்டர்கள், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பாஜக தொண்டர்கள் மற்றும் அஞ்சலி செலுத்துபவர்கள் என ஏராளமானவர்கள் கட்சி தலைமையகத்திற்கு வெளியே பெருமளவில் வரிசையில் நின்றனர்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் முழு அரசு மரியாதைகளுடன் இறுதி சடங்குகளை செய்வதற்காக உடல் யமுனா ஆற்றின் கரையில் உள்ள மலர் அலங்கார துப்பாக்கி வண்டியில் நிகாம்போத் காட்டிற்கு கொண்டு செல்லப்படும் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்கள் அஞ்சலி

பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜேட்லியின் உடலுக்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங், ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் மற்றும் அனுராக் தாக்கூர், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பாஜக தலைமையகத்தில் இறுதி மரியாதை செலுத்தியவர்களில் மணிப்பூர் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் அடங்குவர்.

கட்சி அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த மக்கள் அருண் ஜேட்லியைப் போற்றும் வாசகங்களைக்கூறி கோஷமிட்டனர்.

நேற்று ஜேட்லியின் இல்லத்தில் அவரது உடலுக்கு அங்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பாஜக தலைவர்கள் எனப் பலரும் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x