Published : 25 Aug 2019 01:46 PM
Last Updated : 25 Aug 2019 01:46 PM

காஷ்மீரில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதைக் காட்டிலும் தேசவிரோதம் வேறு இல்லை: பிரியங்கா காந்தி தாக்கு

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று குற்றம்சாட்டுபவர்கள், காஷ்மீரில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதைக் காட்டிலும் அரசியல் செய்வதும், தேசவிரோதமும் இல்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில் 370 பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தையும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. அந்த மாநிலத்தில் எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் தவிர்க்க கடந்த 5-ம் தேதியில் இருந்து பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை அரசு விதித்துள்ளது.

காஷ்மீரில் இன்னும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருவதால், கட்டுபாடுகள் தொடர்ந்து வருகின்றன. முன்னாள் முதல்வர்கள் இன்னும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி, செல்போன், தொலைக்காட்சி, இன்டர்நேட் சேவை இன்னும் கிடைக்கவில்லை.

இந்த சூழலில் ஜம்முகாஷ்மீரில் நிலவும் சூழலை அறியவும், மக்களின் கருத்தைக் கேட்கவும் நேற்று ராகுல் காந்தி, உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகளைக் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றனர்.

ஆனால், அவர்கள் அனைவரையும் ஸ்ரீநகருக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அவர்கள் அதிகாரிகளுடன் பேசிய நிலையிலும் அவர்கள் அனுமதிக்க மறுத்ததால், ஸ்ரீநகரில் இருந்தபடியே, எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ட்விட்டரில் இன்று கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். தன்னுடைய ட்வீட்டில் ஒரு வீடியோவையும் பிரியங்கா காந்தி இணைத்துள்ளார்.

அந்த வீடியோவில் விமானத்தில் ராகுல் காந்தியிடம் காஷ்மீர் குறித்து ஒரு பெண் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. காஷ்மீரில் தானும் தன்னுடைய குடும்பத்தினர், அன்புக்குரியோர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அந்த பெண் பேசியுள்ளார்.

அந்த ட்விட்டீல் பிரியங்கா காந்தி கூறுகையில் "இன்னும் எத்தனை நாட்களுக்கு இது தொடரும், லட்சக்கணக்கான மக்கள் தேசியவாதம் என்ற பெயரில் மவுனமாக்கப்பட்டு, நசுக்கப்படுகிறார்கள்" எனக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் பிரியங்கா காந்தி கூறுகையில், "காஷ்மீர் விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று குற்றம்சாட்டுவோர், காஷ்மீரில் ஜனநாயக அடிப்படை உரிமைகள் கிடைக்கச் செய்யாமல் மறுப்பதைக்காட்டிலும் அரசியல் செய்வதும், தேசவிரோதமும் இருக்காது. இந்த விஷயத்துக்கு எதிராக எதிராக குரல் எழுப்பவது ஒவ்வொருவரின் கடமை. இதை செய்வதை நாங்கள் நிறுத்தமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x