

திருவனந்தபுரம்,
கேரள வெள்ளத்தில் கடந்த ஆண்டு தன்னை யார் எனக் காட்டிக்கொள்ளாமல் சாதாரண மனிதர் போல் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கருத்து சுதந்திரம் குறைந்துவிட்டது எனக் கூறி தனது பதவியை கண்ணன் ராஜினமா செய்துள்ளார்.
தற்போது யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹாவேலியில் மின்சக்தி, நகரமேம்பாடு மற்றும் நகர திட்டமிடல் பிரிவில் பணியாற்றிவரும் கண்ணன் கோபிநாதன் தனது பதவியை கடந்த 21-ம் தேதி ராஜினாமா செய்து கடிதத்தை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால், இவரின் கடிதம் மீது உயர் அதிகாரிகள் எந்தவிதமான முடிவையும் இன்னும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன், புதுப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, பிர்லா இன்ஸ்டியூட்டில் டெக்னாலஜியில் பொறியியல் படிப்பு முடித்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சியாகி பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது தான் ஐஏஎஸ் அதிகாரி எனும் அடையாளத்தை தெரியாமல் செங்கனூரில் உள்ள நிவாரண முகாமில் பணியாற்றினார்.
கடைசிவரை தனது அடையாளத்தை காட்டிக்கொள்ளாமல் பணியாற்றிய நிலையில் சக அதிகாரி வந்து கண்டுபிடித்தபோதுதான் கண்ணன் ஐஏஎஸ் அதிகாரி எனும் விவரமே தெரியவந்தது. அதன்பின் கேரள வெள்ள நிவாரணமாக ரூ.ஒரு கோடியை கண்ணன் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து கண்ணன் கோபிநாதன் தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறியதாவது:
கடந்த சில நாட்களாக நாட்டில் நடக்கும் சில சம்பவங்களை நினைத்து நான் மிகுந்த மனவேதனை அடைந்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களுக்கு அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை. இதை சரி அனைவரும் நினைக்கிறார்கள். நானும் இதில் ஒருபகுதியாகவே இருக்கிறேன் எனப் பார்க்கிறேன்.
ஜம்மு காஷ்மீரின் மாநிலத்தின் முன்னாள் முதல் ஐஏஎஸ் அதிகாரியும் முன ஷா பைசலுக்கு காஷ்மீர் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர் தடுத்துநிறுத்தப்பட்டார்.
நாம் இந்த சேவைக்கு வந்ததே மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான். ஆனால், இங்கு எங்களின் சொந்த குரல்களே எங்களிடம் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது. ஜனநாயகத்தில், ஹாங்காங் அல்லது வேறு எந்த ஜனநாயகமாகட்டும், அரசு ஒரு முடிவு எடுக்கிறது என்றால் அது அவர்களின் உரிமை.
அதேசமயம், அந்த முடிவை எதிர்ப்பதும், வரவேற்பதும் மக்களின் உரிமை. ஆனால், அந்த முடிவுக்கு பதில்அளிக்கக் கூடமக்களை அனுமதிக்க மறுப்பது ஆபத்தானது. எதிர்கால முடிவுகுறித்து எந்தவிதமான எண்ணமும் இல்லை. அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் பதிலைப் பொறுத்துதான் எனது முடிவு இருக்கும். இவ்வாறு கண்ணன் தெரிவித்தார்
எஸ்.ஆர். பிரவீன்