டெல்லி பாஜக தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்ட மறைந்த அருண் ஜேட்லியின் உடல்: படம் ஏஎன்ஐ
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்ட மறைந்த அருண் ஜேட்லியின் உடல்: படம் ஏஎன்ஐ

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைப்பு: பிற்பகலில் தகனம்

Published on


புதுடெல்லி,
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லியின் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மக்களின் அஞ்சலிக்காக இன்றுகாலை வைக்கப்பட்டது.
இன்று பிறப்பகலில் முழுஅரசு மரியாதையுடன் ஜேட்லியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை.

இதற்கிடையே திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பிறபகல் 12.07 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் தெற்கு டெல்லியில் உள்ள அவரின் இல்லத்தில் நேரில் சென்று உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி அரபுநாடுகளில் பயணம் மேற்கொண்டு இருப்பதாலும், நாளை ஜி7 மாநாட்டில் பங்கேற்க இருப்பதாலும், இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறார். மிகச்சிறந்த நண்பரை இழந்துவிட்டேன் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த வருத்தத்துடன் ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், அருண் ஜேட்லியின் உடல் இன்று காலை அவரின் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பாஜக தலைமை அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு காலை 10.30 மணி முதல் நண்பகல் ஒருமணிவரை கட்சித் தொண்டர்கள், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதன்பின் நண்பகல் ஒரு மணியில் இருந்து 2.30 மணிக்குள் அங்கிருந்து ஜேட்லியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு யமுனா நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதிக்கு தகனத்துக்காக எடுத்துச் செல்லப்படும். அங்கு 2.30மணிக்கு இறுதிச்சடங்கு நடக்கும். ஏற்குகுறைய 8 கி.மீ தொலைவுக்கு ஜேட்லியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.

ஏஎன்ஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in