

அகமதாபாத்
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டம், ஹராமி நலா கழிமுகப் பகுதியில் கைவிடப்பட்ட 2 பாகிஸ்தானிய படகுகளை பிஎஸ்எப் வீரர்கள் நேற்று கைப்பற்றினர்.
கட்ச் மாவட்டத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஹராமி நலா கழிமுகம் உள்ளது. இப்பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) வீரர்கள் நேற்று காலை 6.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்தியப் பகுதியில் கைவிடப்பட்ட 2 பாகிஸ்தானிய மீன்பிடி படகுகளை கண்டனர். இதையடுத்து அந்தப் படகுகளை கைப்பற்றி தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தப் படகுகள் ஒன்றில் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இவற்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்கிடமாக பொருள் எதுவும் கிடைக்கவில்லை. என்றாலும் அந்தப் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
ஆழமான மற்றும் சகதி நிறைந்த ஹராமி நலா பகுதியில் இதற்கு முன்பும் கைவிடப்பட்ட படகுகள் மற்றும் பாகிஸ்தானிய மீனவர்களை பிஎஸ்எப் வீரர்கள் பிடித்துள்ளனர்.
கடந்த மே மாதம் இப்பகுதியில் பாகிஸ்தானிய மீன்பிடி படகு ஒன்றை பிஎஸ்எப் வீரர்கள் கைப்பற்றினர். என்றாலும் அப்படகில் வந்த மீனவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். - பிடிஐ