Last Updated : 25 Jul, 2015 08:41 AM

 

Published : 25 Jul 2015 08:41 AM
Last Updated : 25 Jul 2015 08:41 AM

கர்நாடகாவில் தொடரும் சோகம்: ஒரே நாளில் பெண் உட்பட 13 விவசாயிகள் தற்கொலை- அரசுக்கு கடும் நெருக்கடி

கர்நாடகா மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ஒரு பெண் உட்பட 13 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள‌னர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால், கர்நாடகா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த மார்ச் முதல் ஜூலை 20-ம் தேதி வரை பல்வேறு காரணங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயி கள் தற்கொலை செய்து கொண் டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன. கடன் தொல்லை, கந்து வட்டி பிரச்சினை காரணமாக விவசாயிகள் தற்கொலைக்கு தூண்டப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதற்காக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து எதிர்க்கட்சிகளான பாஜக, மதசார் பற்ற ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்டவையும், விவசாய சங்கங்களும் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் தற்கொலை குறித்து கர்நாடகா அரசு அறிக்கை அளிக்கும்படி உள்துறை அமைச்சகமும், ஆளுநர் வாஜூபாய் வாலாவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடம் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் வங்கிகளுக்கும், கூட்டுறவு நிறுவனங்களுக்கும், தனியார் நிதி நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கு நெருக்கடி தரக் கூடாது என உத்தரவிட்டார். மேலும் வட்டிக் கேட்டு விவசாயிகளை அச்சுறுத்தும் கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாநிலம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட கந்து வட்டிக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் கடனை அரசே ஏற்று கொண்டதுடன், தலா ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கினர். விவசாயிகள் திடமான மனதுடன், பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என வானொலியில் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடரும் தற்கொலை

இந்நிலையில் நேற்று ஒரே நாளில், கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் 13 விவசாயிகள் தூக்கிட்டும், விஷம் குடித்தும், தீயிட்டு கொளுத்தியும் தற்கொலை செய்து கொண்டனர். இதில் ஒருவர் பெண் ஆவார். இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் மட்டுமில்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் கர்நாடகா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொடரும் விவசாயிகளின் தற்கொலையை நிறுத்த வேண்டும் விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x