Published : 24 Aug 2019 07:36 PM
Last Updated : 24 Aug 2019 07:36 PM

காஷ்மீர் விவகாரம்: அரசு எதை மறைக்க முயற்சி செய்கிறது?- காங்கிரஸ் கேள்வி

ஜெய்பூர், பிடிஐ

ராகுல் காந்தி தலைமையில் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகருக்குள் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டதையடுத்து ‘அரசு எதை மறைக்க முயற்சி செய்கிறது?’ என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்த ட்விட்டர் பதிவில், “ஜம்மு காஷ்மீரில் நிலைமை இயல்பாக இருக்கிறத என்றால் ஏன் எதிர்க்கட்சித் தலைவர்கள் குழுவை ஸ்ரீநகர் விமானநிலையத்திலேயே தடுக்க வேண்டும்? மோடி அரசு எதை மறைக்க முயற்சி செய்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளது காங்கிரஸ்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய அரசே எதிர்க்கட்சித் தலைவர்களை அங்கு அனுப்பி அங்குள்ள நிலைமைகளைப் பார்க்க அனுமதித்து மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றார்.

“எதிர்க்கட்சிகள் காஷ்மீருக்குள் சென்று பார்த்து திரும்பி வந்து உண்மையை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பார்கள், இது மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கும்” என்றார் அசோக் கெலாட்.

வங்கதேச விடுதலைப்போரின் போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பினார். தற்போதைய மத்திய அரசும் அதைச் செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது என்றார் அசோக் கெலாட்.

சீதாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் ஸ்ரீநகர் விமானநிலையத்தில் தடுக்கப்பட்டோம். இந்த முறை 11 அரசியல் தலைவர்களுடன். எங்களிடம் வாசித்துக் காட்டப்பட்ட நீதி உத்தரவை எதிர்த்து நாங்கள் எங்கள் இந்த பதிலை ஆளுநருக்கு அளித்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.

அந்த பதிலில், “ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு வெளியே எங்கள் குழு உள்ளே செல்வதற்கான அனுமதிக்கு ஆட்சேபணை தெரிவித்துக் கூறப்பட்ட வாசகங்கள் அடிப்படை ஆதாரமற்றது. எங்கள் வருகையின் நோக்கத்தின் மீதே குற்றம்சாட்டுவதற்குச் சமமாக அது இருந்தது. மாண்புமிகு மாநில ஆளுநரின் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றோம், அவர்தான் நேரடியாகப் பார்த்து காஷ்மீர் எவ்வளவு இயல்பாக இருக்கிறது என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

நாங்கள் பொறுப்புள்ள அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், எங்கள் நோக்கங்கள் முழுதும் அமைதிக்கானது மனிதார்த்தமானது. இங்கு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கவே இங்கு இருக்கிறோம், அதே வேளையில் இயல்பு நிலைக்குத் திரும்பும் நடைமுறைகளை துரிதப்படுத்த முயற்சி செய்கிறோம்.

ஆனால் எங்களிடம் வாசித்துக்காட்டப்பட்ட உத்தரவில் எங்கள் வருகைக்கான காரணங்கள் என்று கூறப்பட்டவை அடிப்படை ஆதாரமற்றவை. எனவே அந்த அதனை எதிர்த்து நாங்கள் எங்கள் ஆட்சேபணைகளை வலுவாகப் பதிவு செய்கிறோம். இது ஜனநாயகமல்ல, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஸ்ரீநகருக்குள் எங்களை விடாதது எங்களின் அடிப்படை உரிமைகளை தடுப்பதாக உள்ளது” என்று எதிர்க்கட்சிகள் குழு கையெழுத்துடன் ஆளுநருக்க்கு அனுப்புகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x