Published : 24 Aug 2019 05:32 PM
Last Updated : 24 Aug 2019 05:32 PM

காஷ்மீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பிரஸ் கவுன்ஸில் ஆஃப் இந்தியா மனுத் தாக்கல்

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி காஷ்மீர் டைம்ஸ் நாளேட்டின் நிர்வாக ஆசிரியர் தாக்கல் செய்த மனுவில் தலையிடவும், நீதிமன்றத்துக்கு உதவவும் அனுமதிக்குமாறு கோரி பிரஸ் கவுன்ஸில் ஆஃப் இந்தியா(பிசிஐ) மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில் 370 பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகிறார்கள் என்று மத்திய அரசு கூறினாலும் அங்கு பெரும்பாலான இடங்களில் இன்னும் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்படவில்லை. ஊடகங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் எந்த நாளேடுகளும், சேனல்களும் தங்கள் பணியைச் செய்யமுடியாமல் இருக்கின்றன. கடந்த 5-ம் தேதியில் இருந்து எந்தவிதமான நாளேடுகளும் காஷ்மீரில் அச்சாகவில்லை.

காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரியும், ஊடகத்தினர் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தங்கள் பணியைச் செய்ய அனுமதிக்கக் கோரியும் காஷ்மீர் டைம்ஸ் நாளேட்டின் நிர்வாக ஆசிரியர் அனுராதா பாஸின் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.

இதற்கிடைய பிரஸ் கவுன்ஸில் ஆஃப் இந்தியா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், " பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் உரிமை என்பது, சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் செய்திகளை சேகரிப்பது ஒருபுறம் என்றாலும், தேசத்தின் ஒருமைப்பாடு, இறையான்மையின் நலன் மீதும் அக்கறையும் இருக்க வேண்டும். எங்கள் மனுவின் நோக்கம் என்பது, எங்களின் கருத்துக்களை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், பத்திரிகை சுதந்திரத்தின் நலன்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுமீது முடிவு எடுக்க நீதிமன்றத்துக்கு உதவவும் அனுமதிக்க கோருகிறோம். எங்களின் நோக்கம் என்பது ஊடகங்களின் சுதந்திரத்தை காப்பதும், பராமரிப்பதும், நாட்டில் உள்ள நாளேடுகள் மற்றும் செய்தி நிறுவனங்களின் செய்தி வழங்கும் தரத்தை உயர்த்துவதும்தான்." எனத் தெரிவித்துள்ளது.

பிரஸ் கவுன்ஸில் ஆஃப் இந்தியாவின் மனுவுக்கு பார் கவுன்சில் ஆப் இந்தியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து பிசிஐ தலைவர் மனன் குமார் மிஸ்ரா கூறுகையில், " ஊடகங்கள் செயல்படும் விதம்தான் நாட்டை வலிமைப்படுத்தும். சிலநாடுகள் ஒரு சார்பாக இருப்பதையும், பாகிஸ்தான் ஊடகங்கள் ஒருசார்பாக செய்தி வெளியிடுவதையும் ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வருகின்றது. தேசத்தின் ஒற்றுமையை, நம்பகத்தன்மையை காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை, இது ஊடகங்களுக்கும் பொருந்தும். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19-ன கீழ் முழுமையான சுதந்திரமும், நியாயமான சில கட்டுப்பாடுகளையும்விதி்த்துள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x