

புதுடெல்லி
''கட்சி சில நேரம் சிக்கலான பிரச்சினைகளை எதிர்கொண்டபோது அதற்கு தீர்வு காண நாங்கள் ஜேட்லியை நம்பியிருந்தோம்'' என்று அருண் ஜெட்லி மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி ஓராண்டாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்தார். நோயின் தன்மை தீவிரமடைந்த நிலையில் ஆகஸ்ட் 9 முதல் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி இன்று பிற்பகல் ஜேட்லி காலமானார். அவருக்கு வயது 66. ஜேட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் மூத்தத் தலைவரான எல்.கே.அத்வானி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
"எனது நெருங்கிய சகா அருண் ஜேட்லி ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிலைக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
சட்ட அரங்கில் பெரிய அளவில் வெளிச்சம் பாய்ச்சிய அருண் ஜீ ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார். பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புள்ள கட்சி ஊழியர், நான் கட்சித் தலைவராக இருந்தபோது பாஜகவின் தலைமைக்குழுவில் சேர்க்கப்பட்டவர், விரைவில் கட்சியின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.
எதையும் கூர்ந்து ஆய்ந்து பார்க்கும் தனது ஆழ்ந்த அறிவுக்காக அறியப்பட்ட ஜேட்லி அதற்காகவே மதிக்கப்பட்டார், சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாஜகவில் உள்ள அனைவரும் அவரை எப்போதும் நம்பியிருந்தார்கள்.
அரசியல் வட்டாரங்கள் முழுவதும் பலவித மக்களுடனான நட்பை போற்றி வளர்த்தவர் அவர். மென்மையாக பேசும், புத்திசாலித்தனமும் இதயப்பூர்வமுமான ஒரு மனிதராகவே அவர் நினைவுகூரப்படுவார். உணவுப் பிரியரான அவர் எனக்கு நல்ல உணவகங்களை பரிந்துரைக்க எப்போதும் தவறியதில்லை. ஒவ்வொரு தீபாவளியிலும், அவர் தனது குடும்பத்தினருடன் எங்கள் வீட்டிற்கு வந்து வாழ்த்துத் தெரிவித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த இரண்டு வாரங்களாக அருண்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவர் விரைவில் குணமடைவார் என்றுதான் நாங்கள் அனைவரும் நம்பினோம், அவரது மறைவு பாஜகவுக்கும் ஒட்டுமொத்த சங்க பரிவாருக்கும் மட்டுமல்ல, தேசத்துக்கும் ஒரு பெரும் இழப்பு. அது மட்டுமின்றி அவரது மறைவு எனக்கும்கூட தனிப்பட்ட இழப்பு.''
இவ்வாறு அத்வானி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.