ஜம்மு காஷ்மீர் மார்க்சிஸ்ட் தலைவர் தாரிகாமியை ஆஜர்படுத்த உச்ச நீதிமன்றத்தில் சீதாராம் யெச்சூரி மனுத்தாக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி : கோப்புப்படம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி : கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முகமது யூசுப் தாரிகாமியை நேரில் ஆஜர்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிமனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்புச் சட்டம் 370பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரு யூனியன் பிரதேசங்களாக அறிவி்த்தது.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. செல்போன், தொலைபேசி, இன்டர்நெட், தொலைக்காட்சி ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பள்ளிககூடங்கள் திறக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பள்ளிக்கு வரவில்லை.

மாநிலத்தில் இன்னும் பல்வேறு மாவட்டங்களில் பதற்றமான சூழல் இருப்பதால், பாதுகாப்பு கெடுபிடிகள் குறைக்கப்படவில்லை. இந்த சூழலில் கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா ஆகியோர் சென்றனர்.

ஆனால், அவர்களை ஸ்ரீநகருக்குள் விடாமல் மறுத்த போலீஸார் விமானநிலையத்தில் இருந்தவாரே டெல்லிக்கு திருப்பினர். தங்கள் கட்சி நிர்வாகிகளைப் பார்க்க வேண்டும் என்று இரு மூத்த தலைவர்களும் கூறியபோதிலும் போலீஸார் அனுமதிக்கவில்லை. நீண்டநேரம் விவாதத்துக்குப்பின் வேறுவழியின்றி ஸ்ரீநகருக்குள் செல்லாமல் இருவரும் டெல்லிக்கு புறப்பட்டனர்.

இந்நிலையில் ஜம்முகாஷ்மீர் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் முகமது யூசுப் தாரிகாமியை ஆஜர்படுத்தக்கோரி, அரசியலமைப்புச் சட்டம் 32 பிரிவின் கீழ் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முகமது யூசுப் தாரிகாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், 4 முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in