

புதுடெல்லி
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதன் பின்னர் கடந்த 9-ம் தேதி சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை.
திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார். ஜேட்லியின் உடல்நிலையை, பல்வேறு பிரிவுகள் கொண்ட சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்தனர்.
இந்நிலையில், ஜேட்லி இன்று பிற்பகல் மருத்துவமனையில் காலமானார். ஜேட்லி மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்: அருண் ஜேட்லி மிகச்சிறந்த வழக்கறிஞர், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு: அருண் ஜேட்லியின் மறைவு செய்தி கேட்டு மீளாத்துயருக்கு ஆளாகியுள்ளேன். எனது நெருங்கிய நண்பர், நீண்டகாலம் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு.
உள்துறை அமைச்சர் அமித் ஷா: அருண் ஜேட்லியின் மறைவு எனக்கு தனிப்பட்டமுறையில் இழப்பு. எனது குடும்ப உறுப்பினரில் ஒருவரை இழந்து விட்டேன்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்: சட்டம் மற்றும் கிரிக்கெட் தொடர்பாக நான் உரையாடும் ஒரு நபரை இழந்து விட்டேன்.
மம்தா பானர்ஜி: அனைத்து கட்சியினரும் மதிக்கதக்க ஒரு தவைர் அருண் ஜேட்லி
அரவிந்த் கேஜ்ரிவால்: அருண் ஜேட்லியின் மறைவு, நாட்டுக்கே பெரும் இழப்பு
நவீன் பட்நாயக்: அருண் ஜேட்லி எந்த விஷயத்தையும் ஆழ்ந்து படிக்கும் ஒருநபர்
இதுபோலவே காங்கிரஸ் மூத்த தலைவர்களான ரண்தீப் சுர்ஜே வாலா, சசிதரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் உள்ளிட்ட பலரும் அருண் ஜேட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.