

புதுடெல்லி
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி மதிப்பு நண்பரை இழந்து விட்டேன் என வேதனைத் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
தன் பின்னர் கடந்த 9-ம் தேதி சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை.
திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார்.
ஜேட்லியின் உடல்நிலையை, பல்வேறு பிரிவுகள் கொண்ட சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்தனர். இந்நிலையில், ஜேட்லி இன்று பிற்பகல் மருத்துவமனையில் காலமானார். ஜேட்லி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
அதில் ‘‘அருண் ஜேட்லி அரசியல் சாதனையாளர், மிகச்சிறந்த அறிவாளி, சட்ட நிபுணர். இவை அனைத்தையம் விடவும் நகைச்சுவை உணர்வும், ஈர்ப்பும் கொண்ட தலைவர். அவரது மறைவு என்னை மிகவும் வேதனை படுத்துகிறது. மதிப்பு மிக்க ஒரு நண்பரை இழந்து விட்டேன்.
பல ஆண்டுகளாக அவருடன் பழக கிடைத்த வாய்ப்பு பேரும் பேரு. நுண்ணிய அறிவும், பிரச்சினைகளை புரிந்து கொள்ளுதலும் வெகு சிலருக்கே வாய்க்க பெறும். அத்தகைய தன்மை கொண்டவர் அருண் ஜேட்லி’’ எனக் கூறியுள்ளார்.