

புதுடெல்லி,
மோடியை பிசாசு போல் பாவித்து விமர்சிப்பது எப்படி உதவாதோ அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிப்பதும் உதாவது என்று மோடிக்கு ஏன் பாஜகவினர் அறிவுறுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக "எப்போதும் மோடியை ஒரு பிசாசு போல் பாவித்து விமர்சித்துக் கொண்டே இருப்பது உதவாது" என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் சிங்வி, சசி தரூர் ஆகியோர் கூறியுள்ளனர்.
கடந்த 2 நாட்களில் காங்கிரஸின் மூன்று தலைவர்கள் இத்தகைய கருத்தை கூறிய நிலையில் பாஜகவினருக்கு காட்டமாக ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கபில் சிபல்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "எதிர்க்கட்சிடையும் அதன் தலைவர்களையும் பிசாசு போல் பாவித்து விமர்சிப்பதும் உதவாது என ஏன் எந்த ஒரு பாஜக பிரமுகரும் பிரதமருக்கு அறிவுறத்தவில்லை" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் பிரதமர் மோடியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சித்துமட்டுமே அரசியல் செய்கிறார் என்பதை கபில் சிபல் நிறுவ முயன்றுள்ளார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பிரதமர் மோடி மீதான எதிர்ப்புப் பிரச்சாரத்தை தங்கள் கட்சியினர் கேள்விக்குள்ளாக்குவது போல் ஏன் பிரதமரை பாஜகவினர் கேள்விக்குள்ளாக்கவில்லை என்று கபில் சிபல் வினவியிருப்பது அக்கட்சிக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
-ஏஎன்ஐ