

சரணடைந்தால் தன்னை சிறையில் அடைக்கக் கூடாது என்று தாவூத் இப்ராஹிம் நிபந்தனை விதித்ததால் அவர் சரணடைவதை ஏற்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு உட்பட இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம். இவர் இப்போது பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருப்பதாக தெரிகிறது.
1990-ம் ஆண்டுகளில் சரத்பவார் மகாராஷ்டிர முதல்வராக இருந்த போது, தாவூத் சரணடைய விருப்பம் தெரிவித்தார். அதனை சரத்பவார் ஏற்கவில்லை என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக சரத் பவார் கூறியது: தாவூத் இப்ராஹிம் சரணடைய விருப்பம் தெரிவித்ததாக ராம் ஜேத்மலானி என்னிடம் கூறியது உண்மை தான். ஆனால் தன்னை சிறையில் அடைக்கக் கூடாது என்று தாவூத் இப்ராஹிம் நிபந்தனை விதித்தார். மேலும் தன்னை வீட்டில்தான் தங்க வைக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் சரணடைந்த பிறகு சட்ட நடவடிக்கை களை கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு தரப்பில் அப்போது நான் தெரிவித்தேன். எனவேதான் தாவூத் சரணடையவில்லை. இவ்வாறு பவார் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு கொண்டு வருவ தற்கு தாவூத் ஒன்றும் அல்வா பொட்டலமோ, ஆட்டுக் குட்டியோ அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.