

ஹைதராபாத்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதனை இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைத்ததன் மூலம் சர்தார் வல்லபபாய் படேலின் கனவை நனவாக்கியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் பொங்க பேசியிருக்கிறார்.
ஹைதராபாத்தில், நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் பாஸிங் அவுட் பரேட் நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர், "படேல் சிறு சிறு சமஸ்தானங்களாக பிரிந்துகிடந்த 630 பகுதிகளையும் ஒருங்கிணைத்தார். அதில் ஜம்மு - காஷ்மீர் மட்டும் விடுபட்டுப்போனது. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து அதனை இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைத்ததன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவை மத்திய அரசு நனவாக்கியிருக்கிறது.
சிலநேரங்களில் அதிகாரிகளாகிய உங்களுக்கு பணி நிமித்தமாக சவால்கள் வரலாம். அந்த நேரத்தில் உங்களுக்குக் கிடைக்கப்பெறும் உத்தரவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால், நீங்கள் எப்போதுமே அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகள் எங்களுக்கு 5 ஆண்டுகள் மட்டுமே சேவை செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால் உங்களுக்கு 30 ஆண்டுகள் அரசு சேவை செய்ய வாய்ப்புள்ளது" என்றார்.