Published : 24 Aug 2019 11:01 AM
Last Updated : 24 Aug 2019 11:01 AM

எல்லாம் இயல்பாகவே இருக்கிறது என்றால் அரசியல் தலைவர்களுக்கு ஏன் இன்னும் சிறை?- குலாம் நபி ஆசாத் கேள்வி

ஜம்மு - காஷ்மீரில் எல்லாம் இயல்பாகவே இருக்கிறது என்றால் அரசியல் தலைவர்கள் ஏன் இன்னும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 5-ம் ரத்து செய்யப்பட்டது. மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர், லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளுக்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் எடுக்கப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், அவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரிவிக்கப்படாமலேயே உள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை நேரில் அறியவும், காஷ்மீர் மக்களுடன் உரையாடவும் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (சனிக்கிழமை) ஜம்மு-காஷ்மீருக்கு செல்லவிருக்கின்றனர்.

இந்த சூழலில் அரசு தரப்பிலோ, தலைவர்கள் வந்தால் தேவையற்ற குழப்பம் ஏற்படும் ஆதலால் அரசியல் தலைவர்கள் வரவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு செல்லவுள்ள குலாம் நபி ஆசாத், "ஒருபுறம் எல்லாம் இயல்பாகவே இருக்கும் எனக் கூறும் அரசாங்கம் மற்றொருபுறம் கட்சித் தலைவர்கள் அங்கு வர என்று அனுமதி மறுக்கிறது. இத்தகைய முரணை நான் பார்த்ததே இல்லை. எல்லாம் இயல்பாகவே இருக்கிறது என்றால் இன்னும் ஏன் ஒமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட காஷ்மீர் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் எல்லோருமே பொறுப்புள்ள அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். காஷ்மீருக்கு சென்று அங்கு எந்த சட்டதிட்டத்தையும் உடைத்து செயல்படப் போவதில்லை. ஜம்மு காஷ்மீர் நிலவரம் கவலை அளிக்கிறது. கிட்டத்தட்ட 20 நாட்களாக அங்கிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை" என்று செய்தியாளர்கள் மத்தியில் டெல்லியிலிருந்து காஷ்மீர் புறப்படுவதற்கு முன்னதாகப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x