Published : 24 Aug 2019 10:21 AM
Last Updated : 24 Aug 2019 10:21 AM

அருண் ஜேட்லியின் உடல்நிலை கவலைக்கிடம்

புதுடெல்லி,

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜேட்லியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் கடந்த 9-ம் தேதி இரவு சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை. இதற்கிடையே திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

அருண் ஜேட்லியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக மூத்ததலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் சென்று மருத்துவமனையில் விசாரித்து வருகின்றனர்.
கடந்த திங்கள்கிழமை உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், உ.பி. ஆளுநர் அனந்திபென் படேல், பிஹார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, டெல்லி ஆளுநர் அனில் பைஜால், மேனகா காந்தி ஆகியோர் நேரில் சென்று ஜேட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

கடந்த 10-ம் தேதியில் இருந்து ஜேட்லியின் உடல்நலன் குறித்து எய்ம்ஸ் நிர்வாகம் எந்தவிதமான அறிக்கையும் ஊடகங்களுக்கு அளிக்கவில்லை. இருப்பினும் ஜேட்லியின் உடல்நிலையை, பல்வேறு பிரிவுகள் கொண்ட சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், ஜேட்லியின் உடல்நிலை நேற்று இரவிலிருந்து மிகவும் மோசமடைந்து வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எய்ம்ஸ் மருத்துவனையில் ஜேட்லி அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரின் உடல்நிலையை மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, ஜிதேந்திர சிங், ராம் விலாஸ் பாஸ்வான், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, ஜோதிர்ஆதித்யா சிந்தியா,ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட பலர் வந்து உடல்நலன் குறித்து விசாரித்து சென்றனர்.

கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் அருண்ஜேட்லி கட்சிப்பணிகள், அரசுநிர்வாகத்தில் சற்று ஒதுங்கியே இருந்தார். மக்களவைத் தேர்தலில் பாஜககூட்டணி வென்று 2-வது முறையாக ஆட்சி அமைத்தபின் அமைச்சரவையில் இடம் பெற விருப்பம் இல்லை என்று பிரதமர் மோடிக்கு ஜேட்லி தெரிவித்தார். அவரை சமாதானம் செய்ய பிரதமர் மோடி முயன்றபோது, தனது உடல்நிலையை காரணம்காட்டி விலகிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x