Published : 24 Aug 2019 09:23 AM
Last Updated : 24 Aug 2019 09:23 AM

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதை பெறுகிறார் நரேந்திர மோடி: பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு

புதுடெல்லி

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட சில நாட்களிலேயே, உலகின் பெரிய முஸ்லிம் நாடான ஐக்கிய அரபு அமீரகம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி கவுரவிக்கவுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற முயற்சி செய்து வரும் பாகிஸ்தானுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

காஷ்மீருக்கு70 ஆண்டுகளுக் கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ம் தேதி அதிரடியாக ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக் கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது. காஷ்மீர் விவகாரம் ஐ.நா. சபையில் இருக்கும்பட்சத்தில், இந்தியாவால் எப்படி இவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்? எனவும் அந்நாடு கேள்வியெழுப்பியது. மேலும், இதுதொடர்பாக அமெரிக்காவிடம் நேரடியாக முறையிட்டும் பாகிஸ்தானுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

ஐ.நா. சபையிலும் தோல்வி

இதன் தொடர்ச்சியாக, சீனாவின் ஆதரவுடன் ஐ.நா. சபைக்கு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் கொண்டு சென்றது. ரத்து அதிகாரம் கொண்ட சீனாவின் நிர்பந்தத்தின் பேரில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடி காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியது.

ஆனால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தான் மேற்கொண்ட இம்முயற்சி, பெரிய அளவில் தோல்வியை தழுவியது. ஏனெனில், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பு நாடுகளும் (சீனாவை தவிர) காஷ்மீர் விவகாரம் இந்தியா வின் உள்நாட்டு பிரச்சினை என ஒருமித்த குரலில் கூறிவிட்டன.

முஸ்லிம் நாடுகளுக்கு குறி

இந்நிலையில், ஐ.நா.வில் ஏற்பட்ட தோல்வியை சரிகட்டும் விதமாக, தற்போது இந்தியாவுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை அணிதிரட்டும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஆப்கானிஸ்தான், ஈரான், இராக், ஜோர்டான், குவைத், அரபு நாடுகள் ஆகியவற்றுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஜயீத் விருதினை, பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாடு அறிவித்துள்ளது. இந்த விருதினை மோடி பெறவுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்ட முயற்சி மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், முஸ்லிம் நாடுகளிடமிருந்து இந்தியாவை தனிமைப்படுத்தி விடலாம் என்ற அந்நாட்டின் ராஜதந்திர முயற்சிக்கு இது பெரும் பின்னடைவாக கருதப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x