Published : 23 Aug 2019 06:08 PM
Last Updated : 23 Aug 2019 06:08 PM

குழந்தைகளுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் எதிர்பாராமல் டிரம்ப்பை சந்தித்த சுனில் கவாஸ்கர்

புதுடெல்லி

நியூயார்க்கில் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சைகளை வழங்க நிதி உதவி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள ட்ரம்ப் பெட்மினிஸ்டர் கோல்ஃப் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக அமெரிக்காவிலிருந்து வெளியான ஒரு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ள விவரம்:

நியூயார்க்கில் இந்தியாவிற்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கவாஸ்கர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான சுற்றுப்பயணத்தின்போது வழியில் அமெரிக்காவில் சில முக்கிய நிகழ்ச்சிகளில் சுனில் கவாஸ்கர் பங்கேற்றார்.

அப்போது, பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சைகளை வழங்க நிதி திரட்டும் ஹார்ட் டு ஹார்ட் அடித்தளத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதற்காக (h2h) தனக்காக ஒதுக்கப்பட்ட பயண ஓய்வு நேரத்தை கவாஸ்கர் பயன்படுத்திக்கொண்டார்.

ஹார்ட் டு ஹார்ட் பவுண்டேஷன் என்ற குழந்தைகளுக்கான அமைப்பு, ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவானி மருத்துவமனை, கார்கர், நவி மும்பை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த பவுண்டேஷன் பிறவி இதய குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சைகளை வழங்குகிறது,

அமெரிக்காவுக்கு சுனில் கவாஸ்கர் வரும் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஹார்ட் டு ஹார்ட் பவுண்டேஷ்ன், நியூ ஜெர்சி நியூ யார்க் மற்றும் அட்லாண்டா உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதன்மூலம் 230-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கான நிதி திரட்டப்பட்டது.

நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கலந்துகொண்டார். அப்போது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் அமெரிக்க ஜனாதிபதியும் சந்தித்துப் பேசினர். சுனில் கவாஸ்கரின் குழந்தைகள் நல ஈடுபாட்டை அவர் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. மற்றபடி அவர்கள் பேசிய முழுவிவரம் வெளியாக வில்லை.

ஜமைக்காவில் நடைபெறும் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டுக்குப் பிறகு அவர் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைக்குத் திரும்புவார். மேலும் சில நிதி திரட்டுபவர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வுகள் சிலிக்கான் பள்ளத்தாக்கு, சியாட்டில், லூயிஸ்வில்லி - கவாஸ்கர் பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானம் உள்ள இண்டியானாபோலிஸ் நகரம், ஃபோர்ட் வேய்ன் மற்றும் சிகாகோ ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

செப்டம்பர் நடுப்பகுதியில் தொடங்கி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களுக்கான வர்ணனைகள் செய்ய அவர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x