Published : 23 Aug 2019 05:28 PM
Last Updated : 23 Aug 2019 05:28 PM

2-வது தவறான கணிப்பு: சமாஜ்வாதிக் கட்சியின் அனைத்து அமைப்புகளும் கலைப்பு- அகிலேஷ் யாதவ் அதிரடி

லக்னோ,

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, உத்தரப்பிரதேச மாநில சமாஜ்வாதிக் கட்சியின் மாநில செயற்குழு, மாவட்டக் குழு, இளைஞர், மகளிர் அணி அனைத்தையும் கலைத்து கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று அதிரடியாக உத்தரவிட்டார்.

ஆனால், கட்சியின் மாநிலத் தலைவராக நரேஷ் உத்தம் மட்டும் தொடர்ந்து நீடிக்கிறார் என்று சமாஜ்வாதிக் கட்சி அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் எதிர்துருவங்களாக இருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலி்ல் வெறும் 5 இடங்களில் மட்டுமே சமாஜ்வாதிக் கட்சி வென்றது.

அதுமட்டுமல்லாமல் தேர்தலுக்கு பின் சமாஜ்வாதிக் கட்சியுடனான கூட்டணியை முறித்துவிட்டதாக மாயாவதி அறிவித்தார். விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் தனித்தனியாகப் போட்டியிடுவோம் என்றார்.

தேர்தலுக்குமுன்பிருந்தே சமாஜ்வாதிக் கட்சியில் தொடர்ந்து உள்கட்சிக் குழப்பங்கள் நீடித்து வந்தன. இதன் காரணமாக கன்னோஜ் மக்களவைத் தொகுதியின் எம்.பியாக இருந்த அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மக்களவைத் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து கட்சியைச் சீரமைக்கும் முடிவில் தலைவர் அகிலேஷ் யாதவ் இறங்கினார். முதல்கட்டமாக தேர்தல் தோல்வி அடைந்த அடுத்தநாள் தொலைக்காட்சிகளில் பேசும் செய்தித்தொடர்பாளர்கள் அனைவரையும் அகிலேஷ் யாதவ் நீக்கி, யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் 2022-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையொட்டி கட்சியை வலுப்படுத்தும் பணியில் அகிலேஷ் யாதவ் ஆர்வம் காட்டினார். மக்களவைத் தேர்தல் தோல்வியை ஆய்வு செய்யும் விதமாக, மக்களிடத்திலும், கட்சி உறுப்பினர்களிடமும், தொண்டர்களிடமும் களத்துக்கே சென்று கருத்துக்களை அகிலேஷ் யாதவ் கேட்டு அஅறிந்தார்.

அதன்அடிப்படையில் கட்சிக்குள் புதுரத்தம் பாய்ச்சும் வகையிலும், பாஜகவை எதிர்க்கும் வகையிலும் ஒட்டுமொத்த சமாஜ்வாதிக் கட்சியின் மாநில செயற்குழு, மாவட்ட, இளைஞர், மகளிர் அணி குழுக்களையும் கலைத்து அகிலேஷ் யாதவ் இன்று உத்தரவிட்டார்.

மேலும் விரைவில் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது.

2-வது முறையாக தவறான கணிப்பு

சமாஜ்வாதிக் கட்சி 2-வது முறையாக தவறான கணிப்பினால் மிகப்பெரிய சரிவுக்குச் சென்றது. கடந்த 2017-ம் ஆண்டில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்தார். ஆனால் இந்த கூட்டணிக்கு அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம்சிங் கடுமையாக எதிர்த்தார். ஆனால் அதை நிராகரித்து அமைக்கப்பட்ட கூட்டணி பெரும் சரிவைச் சந்தித்தது.

அதேபோல 2019-ல் மக்களவைத் தேர்தலில் மாயாவதியுடன் கூட்டணி அமைத்தார் அகிலேஷ் யாதவ். இந்த கூட்டணிக்கு முலாயம்சிங் கடுமையாக எதிர்த்தார். ஆனால், பொருந்தாத கூட்டணி வெற்றியைத் தராது என வெளிப்படையாகவே முலாயம் சிங் விமர்சனம் செய்தார். அப்போதும் முலாயம் சிங் வார்த்தைகளைக் கேட்காமல் அகிலேஷ் அமைத்த கூட்டணி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x