Published : 23 Aug 2019 03:26 PM
Last Updated : 23 Aug 2019 03:26 PM

'பாலகோட் தி ட்ரூ ஸ்டோரி' ; இந்திய விமானப் படையின் வீர தீரத்தைப்பற்றி பேசும் படமாக இருக்கும்: விவேக் ஓபராய் பெருமிதம்

மும்பை

இந்திய விமானப் படையின் வீரதீரத்தைப்பற்றி பேசும் படமாக 'பாலகோட் தி ட்ரூ ஸ்டோரி' படம் இருக்கும் என்று திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கிய விவேக் ஓபராய் தற்போது இந்திய விமானப் படை பாலகோட் தீவிரவாத முகாமைத் தாக்கி அழித்த சம்பவத்தை திரைப்படமாக்க முன்வந்துள்ளார். இதற்கான அனுமதியையும் உரிமையையும் இந்திய விமானப் படையிடமிருந்து விவேக் ஓபராய் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பின்னர் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பாலகோட் நகரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது முகாமில் இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தியது.

இந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு விவேக் ஓபராய் குழுவினர் தயாரிக்கும் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மும்மொழிகளில் தயாராகிறது. இத்திரைப்படத்திற்கு 'பாலகோட் - தி ட்ரூ ஸ்டோரி' என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவேக் ஓபராய் கூறியதாவது:

இந்திய விமானப்படை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நிகழ்த்திய தாக்குதலில் ஒன்றுதான் பாலகோட் வான்வழித் தாக்குதல். புல்வாமாவில் நடந்த தாக்குதல் முதல் வான்வழித் தாக்குதல் வரை அனைத்து நான் செய்திகளையும் நான் கவனித்துவந்தேன். அப்போது நிறைய ஊகங்கள் பேசப்பட்டன; அவற்றையும் உள்ளடக்கிய காட்சிகள் இப்படத்தில் இடம்பெறும்.

இந்தப் படம் அபிநந்தன் போன்ற அதிகாரிகளின் துணிச்சலான சாதனைகளை எடுத்துக்காட்டும். ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும்விதமாக எதிரிகளுடன் மோதிய அவர்களின் வீரதீர செயல்களை அப்படியே சிறப்பான காட்சிகளாக சிறந்த முறையில் திரைக்கதையாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையுடையவனாக, ஒரு தேசபக்தனாக மற்றும் திரைப்படத் துறையைச் சார்ந்தவன் என்ற வகையில், நமது இந்திய விமானப் படையின் வீரதீரத்தை எடுத்துக்காட்ட வேண்டியது எனது கடமையாகும்.

இந்த கதையை நாங்கள் படமாக்க முடியும் என்று எங்களை நம்பி அதற்கும் உரிமையும் அளித்த இந்திய விமானப்படைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நம்பிக்கைக்கு உரிய நியாயத்தை எங்கள் படம் செய்யும் என்று நம்புகிறோம்"

இவ்வாறு விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

படைக்குழுக்களின் துணையோடு படம் தயாராகிறது

திரைப்படக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து கூறியுள்ளதாவது:

''வலுவான அரசியல் நோக்கத்துடனும் தகுந்த ராஜதந்திரத்துடனும் விரைவாக சிந்தித்து செயலாற்றியது இந்திய விமானப்படை. வான்வழித் தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் துணிச்சலை திரைப்படமாக்க விரும்பி இத்திரைப்படத்தை உருவாக்குகிறோம்.

பாகிஸ்தானில் மூன்று நாட்கள் சிறைபிடிக்கப்பட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானின் விடுதலையும், 'என்ன நடந்தது என்பது பற்றிய அனைத்து ஊகங்களும் இப்படத்தில் இடம்பெறும். அதோடு உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றியும் இப்படத்தில் விரிவாகப் பேசப்படும். உண்மை நிகழ்வுகளின் சாட்சிகளாக திகழ்ந்த படைக்குழுக்களின் உதவியோடுதான் இப்படம் உருவாக்கப்படுகிறது.''

இவ்வாறு ‘பாலகோட் தி ட்ரூ ஸ்டோரி திரைப்படக் குழுவினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x