Published : 23 Aug 2019 02:45 PM
Last Updated : 23 Aug 2019 02:45 PM

முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி,
முத்தலாக் நடைமுறை தடைசெய்ய கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடைச் சட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த முத்தலாக் தடைச் சட்டத்தில் முத்தலாக் கூறும் முஸ்லிம் பெண்ணின் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் பிரிவு சேர்க்கப்பட்டு இருப்பது சட்டவிரோதமானது என்று மனுதாரர் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்கள் பெண்கள் காலங்காலமாக தங்கள் கணவர்களால் மூன்றுமுறை தலாக் கூறி விவகாரத்து செய்யபப்படும் முறையை தடைசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, சட்டம் இயற்ற மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது. அதன்படி முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த முத்தலாக் தடைச் சட்டத்தின்படி, முஸ்லிம் பெண்களுக்கு எதிராக முத்தலாக் கூறும் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கும் முறைக்கு முஸ்லிம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராகவும், அந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, விதிமுறைகளுக்கு மாறானது என அறிவிக்கக் கோரியும் நான்கு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

அந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் ஆஜராகினார். அப்போது அவர் வாதிடுகையில், " இந்த சட்டத்தில் ஏராளமான பரிமாணங்கள் இருக்கின்றன. குறிப்பாக முத்தலாக் கூறும் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கும் விதி இருக்கிறது.

இதை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. முத்தலாக் நடைமுறை பின்பற்றக்கூடாது, அதை தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்ட நிலையில், அதை குற்றமாக கூறப்பட்டு இருப்பது முஸ்லிம்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. முத்தலாக் என்ற ஒரு விஷயம் இல்லாத நிலையில் அவர்கள் என்ன குற்றம் செய்கிறார்கள்" என்றார்.

இதற்கு நீதிபதி சல்மான் குர்ஷித்திடம், " மதப்பழக்கங்களில் வரதட்சனை மற்றும் குழந்தை திருமணங்களை தவிர்க்க வேண்டும், செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தும், தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இது தீர்வு என்ன" என்று கேட்டார்.

அப்போது சல்மான் குர்ஷித் வாதிடுகையில், " முத்தலாக்கை கடைபிடிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சட்டம் அரசியலமைப்பு ரீதியாக சரியானதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்படும் தேவை இருக்கிறது. இந்த முத்தலாக் பெண்களின் உரிமையை பறிக்கிறதா என்பது குறித்துகூட ஆய்வு செய்ய வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் முத்தலாக் கூறும் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறையும், மனைவியின் வாதத்தைக் கேட்டபின்புதான் நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும் என்ற நடைமுறை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி என்.வி.ரமணா இந்த வாதத்தை ஏற்கிறேன், நீங்கள் கூறியவை குறித்து ஆய்வு செய்வோம். முத்தலாக் தடைச்சட்டத்துக்கு எதிராக மனுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்ப உத்தரவிட்டார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x