ஒரே மாதிரியான எதிர்ப்புப் பிரச்சாரம் மோடிக்கே சாதகமாகும்: ஜெய்ராம் ரமேஷைத் தொடர்ந்து அபிஷேக் சிங்வி கருத்து

ஒரே மாதிரியான எதிர்ப்புப் பிரச்சாரம் மோடிக்கே சாதகமாகும்: ஜெய்ராம் ரமேஷைத் தொடர்ந்து அபிஷேக் சிங்வி கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி,

பிரதமர் மோடிக்கு எதிரான ஒரே மாதிரியான எதிர்ப்புப் பிரச்சாரம் அவருக்கு சாதகமாகவே முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசும்போது, "2014 முதல் 2019 வரை மோடி ஆற்றிய பணிகளை நாம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது. அதனால்தான் அவர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார்.

மக்களைச் சென்றடையக் கூடிய மொழியில் மோடி பேசுகிறார். மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய செயல்களை அவர் செய்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளாதவரை அவரை நாம் எதிர்கொள்ள முடியவே முடியாது.

மேலும் சதா அவரை ஏதோ பிசாசாக பாவித்து விமர்சனம் செய்வது ஒரு போதும் உதவாது, இத்தகைய அணுகுமுறையில் நீங்கள் அவரை எதிர்கொள்ள முடியாது" என்று மோடிக்கு ஆதரவாகப் பேசியிருந்தார்.

இந்நிலையில் அபிஷேக் சிங்வி இன்று (வெள்ளிக்கிழமை) காலை பதிவிட்ட ட்வீட்டில், "பிரதமர் மோடியை பூதாகரமாக பாவித்துப் பேசுவது மட்டும் போதாது என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

ஒரே மாதிராயான எதிர்ப்புப் பிரச்சாரம் அவருக்கு சாதகமாகவே முடியும்.

ஒருவரின் செயல்பாடுகள் நல்லவை, தீயவை, சார்பானவையாக இருக்கலாம். ஆனால், அந்த செயல்பாடுகளை பிரச்சினைகளின் அடிப்படையில் சீர்தூக்க வேண்டுமே தவிர அவற்றை தனிநபர் சார்ந்து மதிப்பிடப்படக் கூடாது.

உஜ்வாலா திட்டம், மோடியின் நல்ல திட்டம்தான்" என்று ஜெய்ராம் ரமேஷுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு எதிர்ப்புப் பிரச்சாரமே காரணம் என்று சில அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களே இப்படியான கருத்தைப் பதிவு செய்திருப்பதை சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in