

ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
உ.பி.யில் மருத்துவக் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 150 பேருக்கும் தலையை மொட்டையடித்து ‘ராகிங்’ செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியான பிறகும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உ.பி.யின் ஏட்டா மாவட்டம், சைபை நகரில் மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் உத்தரபிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் செயல்படுகிறது. இங்கு புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் 150 பேருக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தலை மொட்டை அடிக்கப்பட்டுள்ளது. இதை செய்த மூத்த மாணவர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து வைரலாக்கி விட்டனர். முதல் பதிவில் 150 மாணவர்களும் பொது சாலையில் வெள்ளை நிற சீருடை மற்றும் முதுகில் பையுடன் தங்கள் வகுப்புக்கு செல்லும் காட்சி உள்ளது. இதில் மொட்டை தலையுடன் காணப்படும் மாணவர்கள், குனிந்தபடி வரிசையாக பரிதாபமாக செல் கின்றனர்.
இரண்டாவது வீடியோவில் மூத்த மாணவர்கள் சாலையோரம் உடற்பயிற்சிக்கான ஓட்டத்தில் இருக்க, அவர்களை பார்த்தவுடன் முதலாமாண்டு மாணவர்கள் அச்சத்துடன் குனிந்து வணங்குவது பதிவாகியுள்ளது. மூன்றாவது வீடியோவில் வளாகத்தினுள் மொட்டை தலையுடன் மாணவர்கள் நிற்க, அவர்களை பார்த்தவாறு, பல்கலைக்கழக பாதுகாவலர்கள் செல்கின்றனர். அவர்கள் முகத்தில் எந்த அதிர்ச்சியும் இல்லாததால் அனைவரும் இந்த ராகிங் கொடுமையை முன்கூட்டியே அறிந்திருப்பது தெரிகிறது. இந்த ராகிங் சம்பவம் உ.பி.யில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜ்குமார் கூறுகையில், “கலாச்சாரத்தின் வெளிப்பாடாக மாணவர்கள் கேலி செய்யப்பட்டு வந்தது முடிவுக்கு வந்து பல வருடங்களாகி விட்டது. ஒருவரை தொட்டு துன்புறுத்துவதே ராகிங் எனப்படும். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாங் கள் தங்கியுள்ள விடுதி வார்டன் களிடம் புகார் அளித்தால் கண்டிப் பாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்பும் இதுபோல் சம்பவங்கள் நடந்தபோது தவறு செய்த மாணவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பிரச்சினையில் கவலை வேண்டாம்” என்றார்.
என்றாலும் அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவரும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளிக்க முன்வரவில்லை. நிர் வாகமும், வெளியான வீடியோ ஆதாரத்தை கொண்டு, தவறு செய்த மூத்த மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த 2005, டிசம்பர் 15-ல் இக்கல்லூரி உ.பி. கிராமப் பகுதி மருத்துவம் மற்றும் ஆய்வு நிறுவனம் என்ற பெயரில் தொடங் கப்பட்டது. பிறகு சமாஜ்வாதி அரசால் கடந்த 2016, ஜூன் 5 ம் தேதி மருத்துவப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. தாலுகா தலை நகரான சைபை-க்கு இந்த அளவு முக்கியத்துவம் தருவதற்கு அது, முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் சொந்த ஊர் என்பதே ஆகும். மாவட்ட தலைநகரை விட அதிக கட்டமைப்புகளை சைபை கொண்டுள்ளது.
நாடு முழுவதிலும் ராகிங் தடை செய்யப்பட்டு, தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. எனினும் ராகிங் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. மத்திய அரசு புள்ளிவிவரப்படி, தேசிய அளவில் 2015-ல் 423 என்றிருந்த ராகிங் எண்ணிக்கை, 2 வருடங்களில் 901 ஆக உயர்ந்தது.
கடந்த மாதம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 14 வயது மாணவர் ஒருவர் சக மாணவர்களின் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அதற்குமுன், மார்ச் மாதம் 2 மாணவர்கள் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டனர்.