

கொல்கத்தா
ஜெர்மனியில் உள்ள நேதாஜியின் மகள் அனிதா போஸ், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
எனது தந்தையும் சுதந்திரப் போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி விமான விபத்தில் காலமானார். இதை நான் நம்புகிறேன். ஆனால், பலர் இதை நம்ப மறுக்கின்றனர்.
நேதாஜியின் மரணத்தில் உள்ள மர்மத்துக்கு தீர்வு காண வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதை விரும்பாத முந்தைய அரசுகளில் இருந்த சிலர் இந்த விஷயத்தைப் புறக்கணித்தனர்.
ஏற்கெனவே, நேதாஜி பற்றிய சில ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசு வெளியிட்டது. இதற்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன். நேதாஜியின் மரணத்தில் உள்ள மர்மத்துக்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும்.
நேதாஜியின் சாம்பல் ஜப்பா னில் உள்ள ரெங்கோஜி கோயிலில் உள்ளது. அந்த சாம்பலை மரபணு சோதனை செய்ய வேண்டும். இதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜப்பான் அரசும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் நேதாஜியின் மரணம் பற்றிய மர்மம் விலகும். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச விரும்புகிறேன்.
இவ்வாறு அனிதா போஸ் கூறினார்.