

என்.மகேஷ்குமார்
அமராவதி
ஆந்திராவில் போலவரம் அணை கட்டும் பணிகளுக்கு மறு டெண்டர் வழங்க அம்மாநில உயர் நீதிமன்றம் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் அணைக் கட்டும் பணிகளை நிறுத்தக்கூடாது என உத்தரவிட் டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் முந்தைய தெலுங்கு தேசம் கட்சி அரசு போல வரம் அணை கட்டும் பணிகளை தொடங்கியது. இதன் மூலம் ராயல சீமா பகுதியில் தண்ணீர் தட்டுப் பாட்டை முழுமையாக தீர்த்து விடலாம் என சந்திரபாபு நாயுடு கருதினார். ஆனால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த தும், போலவரம் அணை கட்டும் பணிகளை நிறுத்தியது. மறு டெண்டர் கோர முடிவு செய்தது. இதை எதிர்த்து தற்போது டெண்டர் எடுத்துள்ள நவயுகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை நாடியது.
இந்நிலையில் இந்த விவகாரத் தில் மறு டெண்டர் நடைமுறைகளை நிறுத்தி வைத்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. “போலவரம் அணை கட்டும் பணியை நிறுத்தக் கூடாது. நவயுகா நிறுவனத் திற்கு வழங்கிய டெண்டர் மூலமே அதனை அமல்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு ஜெகன்மோகன் அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த அரசு வழங்கிய டெண்டரை ரத்து செய்து, தனது கட்சியை சேர்ந்தவர் களுக்கு அந்த டெண்டரை வழங்கலாம் என ஜெகன் திட்டமிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “போலவரம் திட்டம் குறித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஆந்திர அரசின் பதில் என்ன? மறு டெண்டர் முடிவினால் அணைக் கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆந்திர அரசு பொறுப்பேற்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.