ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி சுனில் கவுர் ஓய்வு

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: கோப்புப்படம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி,
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர் வியாழக்கிழமையோடு முறைப்படி ஓய்வு பெற்றார்.

ப.சிதம்பரத்துக்கு மட்டுமல்ல, நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பில் விசாரிக்க பல்வேறு முட்டுக்கட்டைகள் இருந்த நிலையில், அதை தனது உத்தரவுகள் மூலம் அரசு விசாரணைக்கு வழிஏற்படுத்திக்கொடுத்தவர் நீதிபதி சுனில் கவுர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுத்ததோடு மட்டுமல்லாமல் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முக்கியக் சதிகாரராக ப.சிதம்பரம் கருதப்படுகிறார் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி சுனில் கவுர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி பிறந்த சுனில் கவுர், தனது சட்டப்பணியை முதலில் பஞ்சாபிலும், அதன்பின் 1984-ம் ஆண்டு ஹரியானா உயர் நீதிமன்றத்தில் இருந்தும் தொடங்கினார். கடந்த 1995-ம் ஆண்டில் இருந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிமன்ற பணியில் இணைந்தார்.


ஓய்வு பெற்ற நீதிபதி சுனில் கவுர்(கோப்புப்படம்)

கடந்த 2008-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்ற சுனில் கவுர், கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி நிரந்தர நீதிபதியாக உயர்ந்தார்.

நீதிபதி சுனில் கவுர், தனது வாழ்நாளில் ஏராளமான முக்கிய கிரிமினல், பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரித்து பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார். குறிப்பாக ஷிவானி பட்நாகர் கொலை வழக்கில் தீவிரமாக இறங்கி, சுனில் கவுர் தீர்ப்பளித்தார்.

ப.சிதம்பரத்துக்கு மட்டும் முன் ஜாமீன் மனுவை நீதிபதி சுனில் நிராகரிக்கவில்லை, மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருகமனும், மோசர் பேயர் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ரதுல் பூரிக்கும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்ஜாமீனை மறுத்தார். இதனால்தான் அவர் வேறுவழியின்றி சரண்அடைய முடிவு செய்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் இறைச்சி ஏற்றுமதியாளர் மெயின் குரோஷிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கையும் நீதிபதி சுனில் கவுர் கையாண்டு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in