Published : 23 Aug 2019 09:41 AM
Last Updated : 23 Aug 2019 09:41 AM

100-க்கும் மேற்பட்ட ஆப்கான், பஸ்தூன் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி மிகப்பெரிய தாக்குதலுக்கு பாக்.திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை 

புதுடெல்லி,

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி, அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் 100-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் பஸ்தூன் தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்ப பாகிஸ்தான் முயற்சித்து வருவதாக உளவுத்துறையும், பாதுகாப்புத்துறையும் எச்சரித்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி, அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பப்பெற்றது. மேலும், மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.

இந்த விஷயத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்று பிரச்சினையை பெரிதாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. ஆனால், மற்ற நாடுகள் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் தனது எல்லைப்பகுதியில் ஏராளமான படைகளையும், போர்விமானங்களையும் குவித்து பதற்றத்தை உருவாக்கி வருகிறது. எந்த சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவும் படைகளை நிறுத்தியுள்ளது.
இந்த சூழலில் இந்தியாவுக்குள் பல்வேறு நகரங்களில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவ ஆப்கானிஸ்தான், பஸ்தூன் தீவிரவாதிகளை தயார் நிலையில் பாகிஸ்தான் வைத்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

இதுகுறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறுகையில், " பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு ஏராளமான ஆப்கன் மற்றும் பதான் தீவிரவாதிகளை அமர்த்தி, அவர்களை இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயார்படுத்தி வருகிறது.

இவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் சார்பில் உச்சபட்ச பயிற்சி்யைப் பெற்றவர்கள், எல்லையில் ஊடுருவி மிகப்பெரிய தாக்குதல் நடத்துவதற்காகவே சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள லிபா பள்ளதாக்கு வழியாக இவர்கள் ஊடுருவக்கூடும்" என எச்சரித்துள்ளது.இதனால்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் அடிக்கடி தாக்குதல் நடத்தி, அதை பரபரப்பாக வைத்து கவனத்தை திசைதிருப்பி வருகிறது.

இந்தியப் பகுதிக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் முக்கிய நகரங்களில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும், ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாமல் நாட்டின் பிறபகுதிகளிலும் இந்திய தீவிரவாதிகளால் வன்முறையை தூண்டிவிடவும் திட்டமிட்டுள்ளதால், அதற்கான சவால்களை சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும் என்று உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், காஷ்மீர் பகுதியில் உள்ளூர் இளைஞர்களை அமர்த்தி தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த இளைஞர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான கீரண், லிபா, பூஞ்ச் ஆகியபகுதிகளில் இருந்து இளைஞர்களைத் தேர்வு செய்து தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சிறப்பு நிருபர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x