

புதுடெல்லி
ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் 100 பேரை காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்துள்ளது என சர்வதேச நாடுகளை நம்பச் செய்வதற்காக காஷ்மீரில் தொடர் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து போர் அனுபவம் மிக்க தீவிரவாதிகள் 100-க்கும் மேற்பட்டோரை இந்திய எல்லைக்குகொண்டு வந்து காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
மேலும் காஷ்மீருக்குள் ஊடுருவ ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாதிகள் 15 பேர் பாகிஸ்தானில்இந்திய எல்லையை ஒட்டிய லிபா பள்ளத்தாக்கில் காத்திருப்பதாகவும் உளவுத் தகவல்கள்மூலம் தெரிய வந்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் முப்தி ரவுஃப் அஸ்கார் கடந்த 19, 20 தேதிகளில் தங்கள் அமைப்பின் பகவல்பூர் தலைமையகத்தில் உயர்கமாண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். காஷ்மீருக்குள் கொடூர தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வது தொடர்பாகவே இந்த ஆலோசனை நடந்துள்ளது.
அடுத்த சில வாரங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் முக்கிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் தனது வெளிநாட்டு தூதரகங்கள் அனைத்திலும் காஷ்மீர் குழு ஒன்றைஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ள இந்தக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.- பிடிஐ