Published : 22 Aug 2019 08:51 PM
Last Updated : 22 Aug 2019 08:51 PM

ப.சிதம்பரம் மீது பிடியை இறுக்கும் சிபிஐ: பிற நிறுவனங்களுக்கான அன்னிய முதலீடு அனுமதிகளையும் ஆராய்கிறது

புதுடெல்லி, பிடிஐ

ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26ம் தேதி வரை விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் நிதியமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஐ.என்.எக்ஸ் தவிர பிற நிறுவனங்களுக்கும் ஒப்புதல் அளித்த அன்னிய முதலீடுகளையும் துருவி வழக்கை விரிவாக்க சிபிஐ முடிவெடுத்துள்ளது.

எஃப்.ஐ.பி.பி வழியாக மேலும் சில நிறுவனங்களின் அன்னிய முதலீட்டை அனுமதித்ததன் மூலம் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சட்டவிரோதமாக பயன் பெற்றுள்ளதாக சிபிஐ சந்தேகிக்கிறது.

ஆனால் சிதம்பரமும் அவரது மகனும் சிபிஐயின் குற்றச்சாட்டுகளை ஒட்டுமொத்தமாக மறுத்தனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் எப்.ஐ.ஆரில் சிபிஐ குற்றச்சாட்டு என்னவெனில் கார்த்தி சிதம்பரம் அமைச்சகத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி ரூ.305 கோடி அன்னிய முதலீடு பெறுவதரு அனுமதி பெற்றுத்தந்ததாகவும் இதற்காக கார்த்தி தொடர்புடைய நிறுவனங்கள் ‘ஆலோசனை சேவைகள்’ என்ற பெயரில் நிதியைப் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய அன்னிய நேரடி முதலீட்டிற்கான அனுமதி விவகாரத்தில் சிதம்பரமே நேரடியாக தொகை பெற்றாரா என்பது பற்றி சிபிஐ எஃப்.ஐ.ஆர். குறிப்பிடவில்லை.

சிதம்பரம் அமைச்சராக இருந்த போது எஃப்.ஐ.பி.பி வழியாக ‘மேலும் சில நிறுவனங்களுக்கு’ கார்த்தி சிதம்பரத்துக்கு அவரது ‘ஷெல்’ நிறுவனங்கள் மூலம் பணம் வந்ததாக சிபிஐ விசாரணை கூறுகிறது.

காங்கிரஸ் தலைமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மே 22, 2004, நவம்பர் 30, 2008ற்கும் இடையேயும் , இரண்டாவதாக ஜூலை 31, 2012, மே 26, 2014 இடையேயும் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார்.

பல நிறுவனங்களின் இத்தகைய முதலீடுகளை சிபிஐ விசாரணை தடம் காண விசாரித்து வருகிறது. இதற்காக சிபிஐ பல்வேறு நாடுகளுக்கு இத்தகைய சந்தேகத்துக்கு இடமாகும் முதலீடுகள் குறித்து தகவல் கேட்டு நீதிசார் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால் நிறுவனங்கள் பெயர், நீதிசார் வேண்டுகோள்களின் விவரங்களை சிபிஐ அளிக்க மறுத்துள்ளது, காரணம் இது விசாரணையை பாதிக்கலாம் என்று கூறுகின்றனர்.

சிபிஐ ப.சிதம்பரத்தைக் கைது செய்து விசாரித்ததில் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் மழுப்பலாக பதிலளித்தார் என்றும் தெரிவித்துள்ளது.

இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றும் பிற சாட்சியங்களின் கூற்றுகளுக்கும் விசாரணையில் நிதியமைச்சர் அளித்த பதில்களுக்கும் மிகப்பெரிய முரண்பாடுகள் இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ப.சிதம்பரம் மீதான பிடியை சிபிஐ மேலும் இறுக்குவதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x