Published : 22 Aug 2019 06:09 PM
Last Updated : 22 Aug 2019 06:09 PM

சிதம்பரம் கைது: எதிர்ப்பு தெரிவித்து போபால் சிபிஐ அலுவலகம் முன்பு காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

போபால்:

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் புதன் இரவு சிபிஐ-யினால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள், ‘அதிகார துஷ்பிரயோகம்’ என்று வாசகங்களுடன் அடங்கிய பேனர் உள்ளிட்டவற்றுடன் கோஷமிட்டனர்.

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சூரஜ் திவாரி கூறும்போது, “எதிர்க்கட்சியினர் மீது சிபிஐ-யை ஏவிவிட்டு பாஜக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது. குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சிபிஐ-யை ஒரு ஆயுதமாக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசு எதேச்சதிகாரப் போக்கை கடைப்பிடித்து காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து வருகிறது” என்றார்.

ஆனால் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ரஜினீஷ் அகர்வால் கூறும்போது, “டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீனை நிராகரித்த நிலையிலும் உச்ச நீதிமன்றம் இடைக்கால பாதுகாப்பை மறுத்தும் காங்கிரஸ் தலைவர்கள் சிதம்பரம் கைதை எதிர்த்து வருகின்றனர்.

விசாரணை முகமைகளை அவர்கள் எதிர்க்கின்றனர். ஊழலில் ஈடுபட்டவரை ஆதரிக்கின்றனர்” என்று சாடினார்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x