வங்கி கணக்கு விவரங்களை ஒப்படைத்து விட்டேன் - நீதிமன்றத்தில் சிதம்பரம் தகவல்

வங்கி கணக்கு விவரங்களை ஒப்படைத்து விட்டேன் - நீதிமன்றத்தில் சிதம்பரம் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி

வங்கி கணக்கு விவரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டதாக வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் சிதம்பரம் கூறினார்.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து, முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணை செய்யப்படும் என உச்ச நீதிமன்றம தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டுக் கதவு மூடியிருந்ததால் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு முழுவதும் அரசியல் பரபரப்பு காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து விசாரணைக்காக சிதம்பரம் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது மனைவியும் மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். மேலும் சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டு வருகின்றனர்.
அதுபோலவே சிபிஐ தரப்பு வாதமும் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வழக்கு விசாரணையின்போது நீதிபதியிடம் சிதம்பரம் சில வார்த்தைகள் பேசினார். தாம் கடந்த 24 மணிநேரமாக தூங்கவில்லை என அவர் கூறினார். மேலும் எனது வங்கி கணக்கு விவரங்களை ஒப்படைத்து விட்டேன் எனக் கூறினார்.
இதனிடையே வழக்கு விசாரணையின்போது சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in