Published : 22 Aug 2019 05:40 PM
Last Updated : 22 Aug 2019 05:40 PM

உபியில் தலித் பெண் தாக்கப்பட்ட விவகாரம்: மக்கள் போராட்டத்திற்குப் பிறகு போலீஸார் வழக்குப்பதிவு

முசாஃபர்நகர்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 19 வயது தலித் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை அடித்துத் துன்புறுத்திய விவகாரத்தில் தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தானா பவன் காவல் நிலையத்தின் எல்லைக்குள்ளான அஹமத்பூர் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தாக்கப்பட்ட 19 வயது பழங்குடியினப் பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸார் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனை அடுத்து பீம் இராணுவத்தின் உள்ளூர் ஆர்வலர்கள் மற்றும் தலித் மக்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியதற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் இவ்வழக்கில ஒருவரும் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த பின்னணி பற்றி எந்த தகவலும் முழுமையாக இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்து வட்ட காவல் அதிகாரி பிரதீப் சிங் நேற்று (புதன் கிழமை) கூறியதாவது, ''தன்னையும் தனது குடும்பத்தினரையும் 7 பேர் அடங்கிய கும்பல் தாக்கியதைப் பற்றி 19 வயதுப் பெண் புகார் அளித்துள்ளார்.

அதில், சம்பவம் நடந்த அன்று அஹமத்பூர் கிராமத்தில் உள்ள அவர்கள் வீட்டுக்குள் ரவி, பாப்பன் மற்றும் மோனு ஆகியோர் திடீரென நுழைந்து அவரை கடுமையாக தாக்கியதாகவும் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று திரும்பவும் விர்பால், கோல்டி, ரஜத் மற்றும் சோட்டா ஆகிய நால்வரோடு வந்து மீண்டும் வீட்டில் இருந்த குடும்பத்தினர் அனைவரையும் கடுமையாக அடித்து நொறுக்கியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

தலித் இளம்பெண்ணின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் தாக்குதலில் ஈடுபட்ட ஏழு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பிறகு அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு காவல் அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x