Published : 22 Aug 2019 03:41 PM
Last Updated : 22 Aug 2019 03:41 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தவிர ப.சிதம்பரம் சந்திக்கும் மற்ற வழக்குகள் என்னென்ன?

புதுடெல்லி,

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தவிர்த்து இன்னும் 5 முக்கியமான வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். முன்ஜாமீன் கோரி சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டமனு உச்ச நீதிமன்றத்தில் நாளைதான் விசாரணைக்கு வரும் நிலையில், இன்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால், தன்மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவரும் சிதம்பரம், தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் இந்த வழக்கில் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து வருகிறார். இந்த ஐஎன்எக்ஸ் வழக்கு சிதம்பரத்துக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ள நிலையில் அடுத்தடுத்து வழக்குகள் அவருக்கு காத்திருக்கின்றன.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு

இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோரைக் கொண்ட ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் மொரீஷியஸ் நாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீட்டை கடந்த 2007-ம் ஆண்டு பெற்றது. இந்த முதலீட்டை பெறுவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சட்டவிரோதமான முறையில், அதிகாரத்தை பயன்படுத்தி உதவினார் என்பது தெரியவந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ, அமலாக்கப்பிரிவுகடந்த 2017-ம் ஆண்டு மே15-ம் தேதி வழக்கப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சூத்திரதாரியாக சிதம்பரம் இருக்கிறார் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்து முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை நேற்று கைது செய்தனர்.

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு

ரூ.3600 கோடி ஒப்பந்த மதிப்புடைய எர்செல் மேக்சிஸ் வழக்கில் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறுவதற்காக சில சட்டவிரோத விஷயங்களை ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு இரு அமைப்புகளும் தனித்தனியாக இருவர்மீதும் விசாரணை நடத்தி வருகின்றன.

கடந்த 2006-ம்ஆண்டு நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, வெளிநாட்டு நிறுவனத்துக்கு எப்ஐபிபி ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுதான் அனுமதி அளிக்க அதிகாரம் இருக்கும் நிலையில் எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. ஏர்செல் மேக்சிஸ்வழக்கில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இருவரின் முன்ஜாமீன் மனுவும் கிடப்பில் இருக்கிறது.

ஏர் இந்தியா விமானக் கொள்முதல்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 111 விமானங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நாளை(ஆகஸ்ட்23)ம் தேதி ஆஜராக அமலாக்கப்பிரிவு சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதில் 42 ஏர்பஸ் விமானங்களும், 24 போயிங் விமானங்களும் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், 111 விமானங்கள் தேவைக்கும் அதிகமாக வாங்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு அதிகாரமிக்க அமைச்சரவைக் குழுவின் தலைவராக இருந்த சிதம்பரம்தான் விமானங்கள் கொள்முதல் குறித்து முடிவு செய்தார். இந்த விஷயத்தில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டார் என்று முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ப சிதம்பரம் தவிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் பெயரும் அடிபடுகிறது.

கறுப்புபண வழக்கு

ப.சிதம்பரம், அவரின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது கறுப்பு பணம் மற்றும் வெளியிடப்படாத வெளிநாட்டுவருவாய் தடுப்புச்சட்டத்தின் கீழ் விசாரிக்க வருமானவரித்துறை நோட்டீஸ் அளித்திருந்தது. இந்த நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரத்து செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வருமானவரித்துறை மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் இருக்கிறது.

நிலஆக்கிரமிப்பு வழக்கு

இந்திய ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் சிதம்பரத்தின் உறவினர் ஒருவரும் சேர்ந்து தமிழகத்தில் ஒரு ஓட்டலுக்காக நிலம் கொள்முதல் செய்ததில் முறைகேடு எழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இஷ்ரத் ஜகான் வழக்கு

மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, இஷ்ரத் ஜகான் வழக்கில் பிரமாணப் பத்திரத்தை திருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு டெல்லி போலீஸார் விசாரணையில் நிலுவையில் இருக்கிறது.

இதுதவிர சாரதா சிட்பண்ட் வழக்கில் ரூ.1.4 கோடி லஞ்சம் வாங்கினார் என்று சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது.ஆனால், அவரை கைது செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தடை விதித்துள்ளது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x