

புதுடெல்லி,
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வளர்க்கும் கிளிதான் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான். அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதைத்தான் அவரும் பேசுவார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பு 370 பிரிவை திருத்தியது. காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. பல்வேறு தளங்களில் விமர்சித்து, சர்வதேச அளவில் பிரச்சினையை கொண்டு செல்ல முயன்று வருகிறது.
இந்நிலையில் டெல்லியில், ஃபாரின் கரஸ்பான்டன்ஸ் கிளப் சார்பில் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சொந்தமாக கருத்துக்கள் ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வளர்க்கும் கிளிதான் இம்ரான் கான். அவர்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறார்களோ அதைத்தான் இம்ரான் கான் பேசுகிறார். இம்ரான் கான் வெற்றுமனிதர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பற்றி இனி அவர்கள் பேச முடியாது. இனிமேல் நமக்கு இருக்கும் ஒரே சிக்கல் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மட்டும்தான்" என சுப்ரமணியன் சுவாமி பேசினார்.
இந்த கருத்தரங்கில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா பேசுகையில், " ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு தவறாகக் கையாண்டு இப்போது இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா ஆகிய 4 நாடுகள் தொடர்புடைய விவகாரமாக்கிவிட்டது" என விமர்சித்தார்.
பிடிஐ