Published : 22 Aug 2019 01:22 PM
Last Updated : 22 Aug 2019 01:22 PM

சிபிஐ கேட்ட 20 கேள்விகள்: மழுப்பலாக பதில் அளித்த ப.சிதம்பரம்

புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடம் நேற்று நள்ளிரவு முதல் சிபிஐ 20-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் அந்த கேள்விகள் அனைத்துக்கும் ப.சிதம்பரம், மழுப்பலாகவும், தெரியாது என்றும், விவரம் தெரியவில்லை என்றே பதில் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

ஐஏஎன்எஸ் மீடியா வழக்கில் சிபிஐ, அமலாக்கப்பிரிவால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீனை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை நேற்று இரவு கைது செய்தனர். இன்று மாலை சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ப.சிதம்பரத்துக்கு முதலில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின் சிபிஐ அதிகாரிகள் வழங்கிய உணவை ப.சிதம்பரம் சாப்பிட மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பின் இரவு 12 மணிக்கு சிதம்பரத்திடம் சிபிஐ. அதிகாரிகள் கேள்விகள் கேட்கத் தொடங்கினர். சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஐ தலைமை அலுவலகம் அழைத்துச் செல்லப்படுவதை அடுத்து சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் சுக்லா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் அனைவரும் அங்கு வந்தனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாகவும், இந்திராணி முகர்ஜியை சந்தித்தது தொடர்பாகவும் ப.சிதம்பரத்திடம் 20 கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டுள்ளார்கள். பெரும்பாலன கேள்விகளுக்கு 'குழப்பமாக இருக்கிறது', 'சரியான பதில் தெரியாது', 'பதில் அளிக்கமுடியாதவகையில் இருக்கிறது' என்று சிதம்பரம் பதில் அளித்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் விசாரணை முடிந்த பின்பும் தூக்கமின்றி ப.சிதம்பரம் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநரான இந்திராணி முகர்ஜி தனது மகளை கொலை செய்த வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். அவர் அப்ரூவராக மாறி அளித்த சாட்சியத்தின் அடிப்படையில்தான் தற்போது சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1. இந்திராணி முகர்ஜியையும், அவரின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியையும் எப்படி உங்களுக்கு தெரியும், யார் மூலம் அறிமுகம் அறிமுகமானார்கள்?

2. இந்திராணி முகர்ஜியையும், பீட்டர் முகர்ஜியையும் அறிமுகம் செய்யும் போது, ஏதேனும் பத்திரிகையாளர்கள் உடன் வந்தார்களா?

3. பணப்பரிமாற்றத்தில் பத்திரிகையாளர்கள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா?

4. இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தில் சிதம்பரத்தை சந்தித்தபோது அவர், கார்த்தி சிதம்பரம் உதவுவார், அவர் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்துவிடுவார், அவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவித்தார் என்று கூறியுள்ளாரே? என்பது குறித்தும்

5. அதுமட்டுமல்லாமல் செஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் ஆகிய இரு நிறுவனங்கள் குறித்த விவரங்களையும் இந்திரா முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள் குறித்தும் என்ன தகவல்?

6. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தந்த விஷத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு எவ்வளவு பணம் கைமாற்றப்பட்டது?

7. கார்த்தி சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனத்துக்கு பணம் ஏதும் பரிமாற்றப்பட்டதா?

8. சிபிஐ ஆஜராக அழைக்கும் போது ஏன் ஒளிந்து கொள்ள முயற்சித்தீர்கள்?

9. கடந்த 24 மணிநேரமாக எங்கு தங்கி இருந்தீர்கள், எந்தவிதமான செல்போன் எண்ணை பயன்படுத்தினீர்கள், வேறு ஏதாவது புதிய செல்போன் எண்ணை பயன்படுத்த முயற்சித்தீர்களா?, உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் உடனடியாக யாரைச் சந்தித்தீர்கள்?

10. வீட்டில் நோட்டீஸ் ஒட்டியபின் ஏன் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவில்லை?


11. உங்கள் பெயரிலும், மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரிலும் எத்தனை போலி நிறுவனங்கள் இருக்கின்றன?

12. இங்கிலாந்து நிர்வகிக்கும் தீவுகளில் இருந்து கார்த்தி சிதம்பரம் ஏன் பணம் பெற்றார்?

13. இங்கிலாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளில் சொத்துக்களை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

14. ஸ்பெயினில் பார்சிலோனா டென்னிஸ் கிளப்பை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?

மேலும் ஐஎன்எஸ் மீடியா குறித்தும், போலி நிறுவனங்கள் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் சுற்றில் 20 கேள்விகள் கேட்டுபதில் பெற்ற நிலையில் 2-ம் சுற்று விசாரணையில் கேள்விகள் இன்று காலை 8 மணியில்இருந்து கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x