Published : 22 Aug 2019 12:36 PM
Last Updated : 22 Aug 2019 12:36 PM

ப.சிதம்பரம் கைதுக்கு காரணமான இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு நேற்று இரவு கைது செய்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் சிதம்பரம் சேர்க்கப்பட்ட பின்னணி:

கடந்த 2007ல் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்க நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை அணுகியபோது அது நிராகரிக்கப்ப்பட்டது.

அதைத் தொடர்ந்து அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி அணுகியபோது 4.6 கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்க ப.சிதம்பரம் அனுமதித்தார் என்பதும், அதற்கு கைமாறாக, மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு பீட்டர் முகர்ஜி உதவவேண்டும் என சிதம்பரம் கூறினார் என்பதும் சிபிஐ தரப்பு வாதம்.

இதுமட்டுமின்றி அந்நியச் செலவாணி பரிமாற்ற விதிமுறையை மீறி 46% சதவீத அளவுக்கு பங்குகள் விற்பனை மூலம் 305 கோடி ரூபாய் அளவுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிதி திரட்டியதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவரான பிறகு புதிய வடிவம் எடுத்தது. அதன்பிறகே சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் சாட்சியங்களை சிபிஐயும், அமலாக்கத்துறை உறுதிபடுத்தின.

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி இந்திராணி முகர்ஜியின் சாட்சியத்தை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்தனர். அந்தல் இந்திராணி முகர்ஜி தெரிவித்து இருந்ததாவது:
‘‘கடந்த 2006-ம் ஆண்டு நார்த் பிளாக்கில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை நானும் எனது கணவரும் சந்தித்தோம். அவர் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்திக்குமாறும், அவர் எங்கள் தொழிலுக்கு உதவி செய்வார் என்றும் சிதம்பரம் கூறினார்.

பின்னர் கார்த்தி சிதம்பரத்தை டெல்லியில் உள்ள ஹயாத் ஓட்டலில் சந்தித்தோம்’’ என இந்திராணி முகர்ஜி சிபிஐ விசாரணையின்போது வாக்குமூலம் அளித்ததாக அப்போது தகவல் வெளியானது.

இந்திராணி முகர்ஜி தெரிவித்த இந்த வாக்குமூலம் சிதம்பரத்தை இந்த வழக்கில் சேர்ப்பதற்கு துணை புரிந்ததாக சிபிஐ தரப்பு தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x