

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 45 அமைச்சர் களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வெற்றி பெற்றதை யடுத்து, பாஜக-வை ஆட்சி அமைக் கும்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று நரேந்திர மோடி தலைமை யிலான அமைச்சரவை குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை நடந்த விழாவில் பதவியேற்றுக் கொண்டது.
பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு களுக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் முன்பக்க திடலில் நடந்த விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள், சோனியா, ராகுல் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் உட்பட 3,500 பேர் கலந்து கொண்டனர்.
மாநில முதல்வர்கள் ஜிதன்ராம் மாஞ்ஜி (பிஹார்), சிவராஜ்சிங் சவுகான் (மத்தியப் பிரதேசம்), ரமண் சிங் (சத்தீஸ்கர்), வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்) உள்ளிட்ட முதல்வர்கள் பங்கேற்றனர். குஜராத் மாநில அமைச்சர்கள் 21 பேரும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழா மாலை 6.15 மணிக்குத் தொடங்கி ஒன்றரை மணி நேரம் நடந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சர்கள் அனைவரும் குடியரசுத் தலைவருடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் அனை வருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அமைச்சரவை யில் தமிழகம் சார்பில் பொன்.ராதா கிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சிறிய அமைச்சரவை
இதற்கு முன்பு இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் 28 கேபினட் அமைச்சர்கள், 11 தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள், 32 இணை அமைச்சர்கள் என 71 அமைச்சர்கள் இருந்தனர். இக்கூட்டணி 2009 நாடாளுமன்ற தேர்தலில் 234 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணி சார்பில் 46 பேர் மட்டுமே அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர்.
அத்வானிக்கு விருப்பமில்லை
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மத்திய அமைச்சரவையில் இடம் பெற விரும்பவில்லை என்பதால், அவருக்கு பதவி வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும்போது எல்.கே.அத்வானியின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அவர் விரும்பும் துறையை ஒதுக்கவும் நரேந்திர மோடி தயாராக இருந் துள்ளார். அத்வானியின் சிஷ்யர் என்று கருதப்பட்டவர் நரேந்திர மோடி. அவர் பிரதமராக இருக்கும் அமைச்சரவையில் அவருக்கு கீழ் பணியாற்ற அத்வானி விரும்பவில்லை. அதனால், சபாநாயகர் பதவி வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அத்வானி சபாநாயகர் பதவியையும் ஏற்க முன்வரவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மட்டுமே நீடிக்க விரும்புவதாக அத்வானி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாமிடத்துக்கு முன்னேறிய சுஷ்மா
தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங்குக்கு அடுத்த படியாக மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளார் சுஷ்மா ஸ்வராஜ். ஹரியாணா மாநில அமைச்சரவையில் இருந்தவர் தேசிய அரசியலில் நுழைந்து அத்வானியின் நன்மதிப்பைப் பெற்றார். வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்தார். பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க அத்வானி எதிர்ப்பு தெரிவித்தபோது, அவரை சமாதானப்படுத்த கட்சியால் அனுப்பப்பட்டவர் சுஷ்மா ஸ்வராஜ்.
தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்ற போதிலும் நரேந்திர மோடியை நேரடியாக பாராட்டாமல், கட்சித் தொண்டர்களின் உழைப்பை பாராட்டினார். அவருக்கு அமைச்சரவையில் மூன்றாம் இடம் அளித்து அத்வானியை சமரசம் செய்துள்ளார் நரேந்திர மோடி.
மகிழ்ச்சியுடன் மன்மோகன் சிங்
பிரதமர் பதவியில் இருந்து விலகும் மன்மோகன் சிங், விழா நடைபெறும் திடலுக்குள் நுழைந்தபோது மகிழ்ச்சியுடன் இருந்தார். தலைவர்களுடன் கைகுலுக்கிவிட்டு அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவருடன் கைகுலுக்கி அருகில் அமர்ந்தார். இலங்கை அதிபர் ராஜபக்சே, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் ஆகியோர் மன்மோகன் சிங்கிடம் கைகுலுக்கினர். நரேந்திர மோடி விழா நடைபெறும் இடத்துக்குள் நுழைந்தபோது அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். அப்போது மன்மோகன் சிங்கும் எழுந்து நின்று கைதட்டியது குறிப்பிடத்தக்கது.
கேபினட் அமைச்சர்கள்:
1. ராஜ்நாத் சிங்
2. சுஷ்மா ஸ்வராஜ்
3. அருண் ஜெட்லி
4. வெங்கய்ய நாயுடு
5. நிதின் கட்கரி
6. சதானந்த கவுடா
7. உமா பாரதி
8. நஜ்மா ஹெப்துல்லா
9. கோபிநாத் முண்டே
10. ராம் விலாஸ் பாஸ்வான்
11. கல்ராஜ் மிஸ்ரா
12. மேனகா காந்தி
13. அனந்தகுமார்
14. ரவிசங்கர் பிரசாத்
15. அசோக் கஜபதி ராஜு
16. ஆனந்த் கீதே
17. ஹர்சிம்ரத் கவுர்
18. நரேந்திர சிங் தோமர்
19. ஜீவல் ஓரம்
20. ராதாமோகன் சிங்
21. தாவர்சந்த் கெலாட்
22. ஸ்மிருதி இரானி
23. ஹர்ஷ் வர்தன்
இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)
1. ஜெனரல் வி.கே.சிங்
2. இந்திரஜித் சிங் ராவ்
3. சந்தோஷ் கங்க்வார்
4. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்
5. தர்மேந்திர பிரதான்
6. சர்வானந்த சோனோவல்
7. பிரகாஷ் ஜவடேகர்
8. பியுஷ் கோயல்
9. ஜிதேந்திர சிங்
10. நிர்மலா சீதாராமன்
இணை அமைச்சர்கள்
1. ஜி.எம்.சித்தேஸ்வரா
2. மனோஜ் சின்ஹா
3. நிஹால் சந்த்
4. உபேந்திர குஷ்வாஹா
5. பொன்.ராதாகிருஷ்ணன்
6. கிரண் ரிஜிஜு
7. கிரிஷன் பால் குர்ஜார்
8. சஞ்சீவ் குமார் பாலியான்
9. மன்சுக்பாய் வாசவா
10. ராவ் சாஹிப் தான்வே
11. விஷ்ணுதேவ் சாய்
12. சுதர்சன் பகத்