

புதுடெல்லி
கார்த்தி சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டின் மூலம் பெற்ற லஞ்ச பணத்தைக் கொண்டு, ஸ்பெயினில் டென்னிஸ் கிளப் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடை
பெற்று வருகிறது. இது தொடர்பாக இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் லஞ்சப் பணத்தில்
வாங்கியதாக சந்தேகிக்கப்படும், கார்த்திக்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்பிலான பல்வேறு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் சிதம்பரம் வசித்து வரும் ஜோர் பாக் பங்களா, ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள டென்னிஸ் கிளப் (ரூ.15 கோடி), பிரிட்டனில் உள்ள குடில்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்ட சொத்துக்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இதுதவிர, சென்னை, நுங்கம்பாக்கம் ஐஒபி கிளையில் கார்த்தி டெபாசிட் செய்துள்ள ரூ.9.23 கோடி, சென்னை, டிசிபி வங்கியில் கார்த்திக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயரில் உள்ள ரூ.90 லட்சம் டெபாசிட் ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்தான் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரை கைது செய்ய சிபிஐயும் அமலாக்கத் துறையும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அவரை கைது செய்து காவலில் எடுத்த பிறகு, மேற்கண்ட சொத்துக்களை வாங்குவதற்கு பணம் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.