

புதுடெல்லி
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது போலி என்கவுன்ட்டர் வழக்கில் அமித் ஷா கைது செய்யப்பட்டார். இப்போது, நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. அமித் ஷா உள்துறை அமைச்சராக உள்ள நிலையில், சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவருடைய முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்துவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
போலி என்கவுன்ட்டர் வழக்கு
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தபோது, அமித் ஷா அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சொரபுதீன் என்பவர் 2005-ல் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இது போலி என்கவுன்ட்டர் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் அமித் ஷா மீது கொலை வழக்கு பதிவு செய்த சிபிஐ, அவரை 2010-ம் ஆண்டு கைது செய்தது.
இதையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். 3 மாதம் கழித்து ஜாமீன் வழங்கிய நீதி
மன்றம், குஜராத்தில் நுழைய 2 ஆண்டுகளுக்கு தடை விதித்தது. இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2014-ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது.
அந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கிலிருந்து அமித் ஷாவை நீதிமன்றம் விடுதலை செய்தது. அப்போது மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ப.சிதம்பரம் சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தார். குறிப்பாக, உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான் அமித் ஷா கைது செய்யப்பட்டார். எனவே, அமித் ஷா மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் பாஜக அப்போது குற்றம்சாட்டியது. இப்போது, ப.சிதம்பரம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் அதேகுற்றச்சாட்டை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.