

புதுடெல்லி
ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது மேலும் 4 நிறுவனங்களுக்கு முறைகேடான வழியில் அனுமதி வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி), அன்னிய நேரடி முதலீடு (எப்டிஐ) ஆகியவற்றின் கீழ் 4 ‘ஷெல்’ நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் அனுமதி கொடுத்தார் என தற்போது புதிதாக புகார் எழுந்துள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்றத்துக்காகவே, பல நிறுவனங்கள் பெயரளவில் தொடங்கப்படுகின்றன. இத்தகைய போலி நிறுவனங்களே, ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
டியாஜியோ ஸ்காட்லேண்ட் நிறுவனம், கட்டாரா ஹோல்டிங்ஸ், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம், எல்போர்ஜ் நிறுவனம் என்ற பெயரில் போலி நிறுவனங்கள் தொடங்கி சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திலும் தலா ரூ.300 கோடி வரை சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், அதுதொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை தற்போது முடுக்கி வி்ட்டிருப்பதாகவும் அந்த அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர்களை அமலாக்கத்துறை சேர்த்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.