

புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படும் நிலையில், அவர் 24 மணி நேரத்துக்கு பிறகு டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தநிலையில் உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வெள்ளிக்கிழமை அன்று விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரை தேடி சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் உள்ள வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் இல்லாததால் நோட்டீஸை வழங்கி விட்டு திரும்பியதாக தகவல் வெளியானது. இதனால் ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் எனும் விவரம் தெரியாமல் இருந்தது.
ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாத வகையில் அமலாக்கப்பிரிவும், சிபிஐ அமைப்பும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளன. இந்தநிலையில் சிதம்பரம் இன்று இரவு 8.15 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
அவருடன் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும், வழக்கறிஞர்களும் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களுக்கு சிதம்பரம் பேட்டியளித்தார்.
அப்போது ஐ.என்.எக்ஸ் வழக்கில் தனக்கு எதிராகவும், தனது குடும்பத்தினருக்கு எதிராகவும் எந்த குற்றச்சாட்டும் இல்லை என தெரிவித்தார். கடந்த 24 மணிநேரத்துக்கும் மேலாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.