

புதுடெல்லி
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கப்பிரிவை தொடர்ந்து சிபிஐயும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதையடுத்து, அவரைக் கைது செய்ய சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வெள்ளிக்கிழமை அன்று விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது
ப.சிதம்பரம் கைது செய்வதற்கான பலமான வாய்ப்புகள் உருவாகி இருப்பதால் அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்கும்வகையில் அமலாக்கப்பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இதன்படி ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் அமலாக்கப்பிரிவை தொடர்ந்து சிபிஐயும், ப.சிதம்பரத்துக்கு எதிராக இன்று லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ப.சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடாமல் தடுக்கும் பொருட்டே இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.